Breaking News

சிறிலங்காவின் நீதித்துறை குறித்து ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் கடும் விமர்சனம்



சிறிலங்காவின் நீதி முறைமை தொடர்பாக, நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களின் சுதந்திரம் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மோனிகா பின்டோ தனது அறிக்கையில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கடந்த 2016 ஏப்ரல் 29ஆம் நாள் தொடக்கம் மே 7ஆம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டிருந்த நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களின் சுதந்திரம் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மோனிகா பின்டோவின் அறிக்கை, நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போதைய, நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களின் சுதந்திரம் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான, டியேகோ கார்சியா சயன் இந்த அறிக்கையை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 35 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பித்தார்.

“சிறிலங்காவில் 2009இல் போர் முடிவுக்கு வந்த போதிலும், நீதிமுறைமையில் இன்னமும் மிகவும் ஆழமான காயங்களைக் காண முடிகிறது.

மறுசீரமைப்புக்கான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆயுத மோதல்களின் போது நீதித்துறை மோசமான நிலையில் இருந்ததை காண முடிகிறது.

சிறுபான்மைக் குழுக்களுக்கு சேவைத்துறை மற்றும் காவல்துறையில் சமபிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. மொழி ரீதியான சிக்கல்கள் மிகவும் தீவிரமாக உள்ளன. இது நீதித்துறையில் மிகத் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

நீதியைப் பெற்றுக் கொள்வதற்கும், மொழிப் பிரச்சினை தடையாக உள்ளது. தமிழ்ப் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் இந்தப்பிரச்சினைக்கு அவசரமான தீர்வு காணப்பட வேண்டும்.

தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலைமை பரந்துபட்டளவில் உள்ளது. இது ஒரு வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. இதனால், நீதித்துறை மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்படுகிறது.” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

20 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் மோனிகா பின்டோ, 49 பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.