தர்காநகர் சம்பவத்துக்கு முன்னர் மஹிந்த என்ன கூறினார்?- சம்பிக்க
தர்காநகர் இன வன்முறைச் சம்பவத்தின் பின்னர், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை நான்தான் கைது செய்ய விடாது தடுத்து வைத்தேன் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
என்மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பவர்களது கருத்துக்கு நான் இவ்வாறு தான் பதிலளிக்கின்றேன்.
தற்பொழுது பௌத்த சாசனத்தையும், பௌத்த தேரர்களையும் பாதுகாக்க வேண்டும் என தனது மார்பில் அடித்துக் கருத்துக் கூறிவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது கால அமைச்சரவைக் கூட்டமொன்றின் போது, பொதுபல சேனா என்ற ஓர் அமைப்பு, அதன் ஆரம்ப கூட்டமொன்றை மஹரகமையில் நடாத்தப் போவதாகவும் அதனைத் தடை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதன்போது, அமைச்சரவையில் யாருக்கும் தலைசாய்க்காமல் பேசுவதற்கு அதிகாரம் பெற்றவர்களாக நாம் காணப்பட்டதனால், மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு முரண்பட்டோம். குறித்த அமைப்பு எந்தவித குற்றச்சாட்டுக்களுக்கும் உட்பட்டிருக்க வில்லை. அவ்வாறு சட்டவிரோத குற்றச்சாட்டுக்களுக்கு உட்பட்டதாக சான்றுகளும் இல்லை. இதனால், அவ்வமைப்பின் கூட்டத்துக்கு தடை போட முடியாது என அமைச்சரவையில் நான் குறிப்பிட்டேன் அவ்வளவுதான்.
இதன்பிறகு, பொதுபல சேனாவுக்கு வாகனம் கொடுத்து, அதிகாரம் கொடுத்து அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுத்து எமக்கு எதிராக செயற்பட கோட்டாபய ராஜபக்ஷவும், மஹிந்தவினரும் தான் உதவினர். இறுதியில் அவர்களுக்கே அது வினையாக மாறியது எனவும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க விளக்கமளித்தார்.