Breaking News

கருணைக் கொலை செய்து விடுங்கள் – தமிழ்நாடு முதல்வருக்கு ரொபேர்ட் பயஸ் கடிதம்



தம்மைக் கருணைக் கொலை செய்து, உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விடுமாறு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும், ரொபேர்ட் பயஸ், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சிறைக்கண்காணிப்பாளர் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு மூன்று பக்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், “2014 ஆம் ஆண்டில் எமது விடுதலை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த முடிவை எல்லா அரசியல் தலைவர்களும் ஆதரித்தனர். நீதிமன்றங்களும் அதனைப் பரிந்துரைத்தன. ஆனாலும் அந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

எங்களை விடுதலை செய்யும் மாநில அரசின் முடிவை, முன்பிருந்த மத்திய அரசும் தற்போதைய மத்திய அரசும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. எமது வாழ்வை சிறைக்குள்ளேயே முடித்து விட வேண்டுமென்றே விரும்புகின்றன.

கடந்த ஜூன் 11ஆம் நாளுடன் நான் சிறைக்குள் வந்து 26 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

நீண்ட சிறைவாசம் என்னை மட்டுமன்றி, ஒட்டுமொத்த குடும்பத்தையும் தண்டனைக்குள்ளாக்கியிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக என்னை எனது குடும்பத்தினர் வந்து சந்திக்காத நிலையில், வாழ்வில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

கடந்த ஜூன் 11ஆம் நாளுடன் நான் சிறைக்குள் வந்து 26 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இனி விடுதலை இல்லை என்ற நிலையில், உயிர் வாழ்வதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

ஆகவே என்னை கருணைக் கொலை செய்து உடலை, எனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விடுங்கள்” என்று ரொபேர்ட் பயஸ் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

அதேவேளை, ரொபேர்ட் பயசின் சட்டவாளரான, தடா சந்திரசேகர், இதுகுறித்து பிபிசிக்கு தகவல் வெளியிடுகையில், “நான் அவரிடம் பேசினேன். அவருக்கு மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள். இருந்தும் வாழ முடியவில்லை.

ஆகவே இந்த முடிவுக்கு வந்துவிட்டார். இந்தக் கடிதம் சிறைத் துறைக் கண்காணிப்பாளர் மூலம் முதல்வருக்கு அனுப்பப்பட்டது” என கூறியுள்ளார்.