Breaking News

கட்டாரில் விமான நிலையம், வணிக நிறுவனங்களில் முண்டியடிக்கும் கூட்டம் – இலங்கையர்கள் அச்சம்



கட்டாருடனான அனைத்துத் தொடர்புகளையும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாஹ்ரெய்ன், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள் துண்டித்துள்ளதால், கட்டாரில் உள்ள இலங்கையர்கள் மீது எந்த உடனடிப் பாதிப்பும் ஏற்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், நிலைமைகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால், அங்குள்ள சிறிலங்கா தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

கட்டாரில் உள்ள, அந்த நாட்டுடன் உறவுகளை முறித்துக் கொண்ட நாடுகளின் நிறுவனங்களில் பணியாற்றுவோர், நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம்.” என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார்.

அதேவேளை, கட்டாரில் உள்ள இலங்கையர்கள் நேரடியாக எந்தப் பாதிப்பையும் எதிர் கொள்ளமாட்டார்கள் என்று சிறிலங்காவின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவும் தெரிவித்துள்ளார்.

இது ஒரு பிராந்திய விவகாரம். இதனால் சிறிலங்காவுக்கு அச்சுறுத்தல் இல்லை. இராஜதந்திர ரீதியாக சிறிலங்காவுக்கு கட்டாருடன் எந்தரப் பிரச்சினையும் இல்லை.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வங்கிக் கிளைகள், கட்டார் ரியால்களை மாற்றுவதை நிறுத்தியுள்ளதாக நேற்றுக்காலை செய்திகள் வெளியாகின. ஆனால், இதுதொடர்பாக சிறிலங்கா மத்திய வங்கி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

வழக்கம் போல கட்டார் ரியால்களை மாற்றிக் கொள்ள முடியும்” என்றும் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இதற்கிடையே, கட்டார் மீது பொருளாதாரத தடைகள் விதிக்கப்படவில்லை என்றும், இதனால் எந்த அச்சமும் கொள்ள வேண்டியதில்லை என்றும் கட்டாரில் உள்ள சிறிலங்கா தூதுவர் ஏஎஸ்பி லியனகே தெரிவித்துள்ளார்.

“கட்டாரில் உள்ள இலங்கையர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது சிறிலங்கா மீது பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால், எந்த அச்சமும் கொள்ள வேண்டியதில்லை.கட்டாரில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் கட்டார் மன்னருடன் நிலைமைகள் தொடர்பாக பேச்சு நடத்தியுள்ளனர்.

நிலைமைகள் தொடர்பாக கட்டாரில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.பல விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால் விமான நிலையத்தில் பெருமளவானோர் முண்டியடிக்கின்றனர்.

பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் பெருவணிக நிறுவனங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

ஆனால், சிறிலங்கன் விமான சேவை தொடர்ந்து அட்டவணைப்படி சேவைகளை மேற்கொள்கிறது. பொருளாதாரத் தடையும் விதிக்கப்படவில்லை எந்த அச்சமும் கொள்ள வேண்டியதில்லை” என்றும் தெரிவித்தார்.