சம்பந்தன் காலத்தில் முடியாவிடின் ஒருபோதும் தீர்வுகாண முடியாது!
நான் ஒரு மிதவாத மற்றும் தேசிய பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்படவேண்டுமென விரும்புகின்றவன் என்ற அடிப்படையில் ஒரு விடயத்தை தெ ளிவாக குறிப்பிடுகின்றேன்.
அதாவது தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு மற்றும் புரிந்துணர்வைக் கண்டு வியந்து பாராட்டுகின்றேன்.
எனவே சம்பந்தன் இந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற காலப்பகுதிக்குள்ளேயே இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டுவிடவேண்டும்.
அவ்வாறு சம்பந்தன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற காலப்பகுதியில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாவிடின் எமது வரலாற்றில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமலேயே போய்விடும் என்று அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஒற்றை யாட்சி முறைமையின் கீழ் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தயார் என்பதனை அறிவிக்கின்றோம்.
அத்துடன் செனட் சபை குறித்து பரிசீலிக்கலாம். இந்த இடத்துக்கு சுதந்திரக் கட்சி வந்துள்ளமை வரலாற்று திருப்பு முனையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கே: நல்லாட்சி அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி திருப்தியுடன் அங்கம் வகிக்கிறதா?
ப: கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததுடன் எந்தவொரு கட்சிக்கும் 113 ஆசனங்கள் கிடைக்கவில்லை. பிரதான இரண்டு கட்சிகளும் ஏனைய கட்சிகளிலிருந்து எம்.பி.க்களை பிரித்தெடுத்து வேண்டுமானால் ஆட்சி அமைத்திருக்கலாம்.
ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அதுமட்டுமன்றி 19 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்கள் செல்லும்வரை பாராளுமன்றத்தை கலைக்க முடியாது. ஒரு வருடத்தில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரம் 19 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக நீக்கப்பட்டது.
இந் நிலையில் 106 ஆசனங்களை பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி மட்டும் ஆட்சியமைத்திருந்தால் நான்கு வருடங்களுக்கு நாம் எதுவும் செய்ய முடியாது.
அதனால்தான் பல்வேறு பொதுவான நோக்கங்களை பிரதானமாகக் கொண்டு இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தன. மிக முக்கியமாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணுதல், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற நோக்கங்களை நிறைவேற்ற தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.
இதில் முரண்பாடுகள் பிரச்சினைகள் நெருக்கடிகள் உள்ளன. எனினும் தேசிய பிரச்சினை தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களுக்காக நாம் பொறுமையுடன் பயணிக்கின்றோம்.
கே: அரசாங்கத்திலிருந்து விலகி விடுவோம் என சுதந்திரக் கட்சி கருதியதுண்டா?
ப: சில சந்தர்ப்பங்களில் அதிருப்திகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் நாங்கள் அரசாங்கத்தை விட்டு வெ ளியேறினால் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைத்துவிடும். அதற்கு இடமளிக்க முடியாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந் நாட்டின் தலைவர். அதுமட்டுமன்றி அவர் எமது கட்சியின் தலைவர். எனவே தேசிய ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்காக நாங்கள் இணைந்து பயணிக்க வேண்டிய தேவையுள்ளது. மிக முக்கியமாக இந்த நாட்டின் புரையோடிப்போயுள்ள தேசிய பிரச்சினையை தீர்ப்பது எமது பிரதான நோக்கமாக இருக்கிறது. எனவே அதற்காக பொறுமையுடன் பயணிக்கிறோம்.
கே: அடுத்த மூன்று வருடங்களுக்கு ஐ.தே.க., சு.க. உறவு எவ்வாறு நீடிக்கும்?
ப: எதிர்வரும் மூன்று வருடங்களுக்கும் இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதாவது எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இது தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடைய வேண்டியுள்ளது. அதற்கிடையில் இரண்டு கட்சிகளும் இது தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வரும் என நாம் நம்புகிறோம். மிக முக்கியமாக யுத்தம் முடிவடைந்த பின்னர் இதுவரை எம்மால் தேசிய பிரச்சினையை தீர்க்க முடியவில்லை.
பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டாலும் எம்மால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை. எனவே எப்படியாவது அடுத்த மூன்று வருடங்களும் இணைந்து பயணித்து தேசிய பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட வேண்டும். இதற்காகவாவது எதிர்வரும் மூன்று வருடங்கள் நாங்கள் இணைந்து பயணிக்க வேண்டியுள்ளது.
கே: இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து நீங்கள் ஆழமாக பேசுகின்றீர்கள். எனினும் அதிகாரப் பகிர்வு விடயத்தில் தொடர்ந்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. சமஷ்டி முறைமை, வட கிழக்கு இணைப்பு என்பவற்றை தமிழ் கூட்டமைப்பு கூறுகிறது. ஆனால் பிரதான கட்சிகள் இரண்டும் அதனை எதிர்க்கின்றன. எனவே தீர்வு என்பது எவ்வாறு சாத்தியமாகும்.
ப: இதுதொடர்பில் அனைத்து தரப்பினரும் தெளிவாக இருக்கின்றனர். இங்கு ஒற்றையாட்சி என்பதன் அர்த்தம் தொடர்பில் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஒற்றையாட்சி என்பது பிரிபடாத நாட்டுக்குள் தீர்வு என்பதாகும்.
சமஷ்டி என்பது முடியாத ஒரு விடயமாகும். இதனை தமிழ் கூட்டமைப்பும் உணர்ந்து கொண்டுள்ளது என்பதை நம்புகிறோம். 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பது தற்போது எமது நோக்கமாகும். அந்த இடத்திற்கு சுதந்திரக் கட்சி வந்துள்ளமையே மிகப் பெரிய திருப்பு முனையாகும்.
13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்ல முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கூறினார். செனட் சபை என்ற விடயத்தில் அதற்கு நாமும் தயார். ஆனால் ஒற்றையாட்சியின் கீழேயே அது இருக்க வேண்டும்.
இதில் முரண்பாடுகள் எழலாம். ஆனால் ஐ.தே.க.வும், சுதந்திரக் கட்சியும், தமிழ் கூட்டமைப்பும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த விடயத்தில் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்.
இங்கு தீர்வை அடைவதற்கான அர்ப்பணிப்பே முக்கியம். ஒற்றையாட்சி முறைமையில் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தயார் என்பதுடன் செனட் சபை குறித்து பரிசீலிக்கலாம் என்பதை தெரிவிக்கிறோம்.
கே:13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுலாகும் எனும்போது பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வருகின்றனவே?
ப: பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் அதில் வருகின்றன. பொலிஸ் அதிகாரங்களை ஒவ்வொரு மாகாணத்துக்கும் பொலிஸ் ஆணைக்குழுக்களை நியமித்து வழங்க முடியும். காணி அதிகாரங்களும் மாகாண காணி ஆணைக்குழுவை நியமித்து வழங்க முடியும். இது இறுதி தீர்மானம் அல்ல. எனினும் இதிலிருந்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம். இந்த இடத்துக்கு நாங்கள் வந்துள்ளமையே மிகப்பெரிய திருப்புமுனையாகும்.
எனவே இதனை எந்தத் தரப்பினரதும் இனவாதிகள் குழப்பிவிடக்கூடாது. குறிப்பாக எமது முயற்சியை வடக்கு முதல்வர் குழப்பிவிடுவாரோ என்று நாங்கள் அஞ்சுகின்றோம்.
சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் மிதவாதப் போக்கில் தமிழ் மக்களுக்கு எப்படியாவது தீர்வைப் பெறவேண்டும் என்று செயற்பட்டுவருகின்றனர். ஆனால் வடக்கில் ஒரு பகுதியினர் இதனை குழப்பிவருகின்றமை தெ ளிவாகின்றது. மறுபுறம் தெற்கிலும் சிலர் இனவாதத்தை முன்னெடுக்கின்றனர்.
கே: அரசியல் தீர்வை பெறவேண்டும் என்பதற்காக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றார். இது அவருக்கு வடக்கில் சில நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. அவரின் ஆபத்தான இந்த அரசியல் நிலை குறித்து அரசாங்கம் புரிந்துகொண்டுள்ளதா?
ப: நிச்சயமாக சம்பந்தனின் இந்த நிலையை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். அதனால்தான் விரைவாக எப்படியாவது தீர்வை அடையவேண்டும் என்று முயற்சிக்கின்றோம்.
அதற்காகத்தான் சில சிக்கல்களுக்கு மத்தியில் இரண்டு கட்சிகளும் இணைந்து பயணித்துவருகின்றன. என்னைப் பொறுத்தவரையில் 2000 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்வுத்திட்டம்தான் மிகச் சிறந்தது. அதில் ஐக்கிய இலங்கை என்ற விடயம் காணப்பட்டது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அன்று தமிழ்த் தலைவர்கள் அதனை நிராகரித்தனர். தற்போது அனைத்தும் தலைகீழ் மாறிவிட்டன. இன்று அவ்வாறான ஒரு நிலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய நிலைமையில் நான் ஒரு மிதவாத மற்றும் தேசிய பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்படவேண்டும் என்று விரும்புகின்றவன் என்ற அடிப்படையில் ஒரு விடயத்தை இங்கு கூறுகின்றேன்.
அதாவது தீர்வு விடயத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வெ ளிப்படுத்தும் அர்ப்பணிப்பு மற்றும் புரிந்துணர்வைக் கண்டு வியந்து பாராட்டுகின்றேன். இதனை வைத்து ஒரு விடயத்தை திட்டவட்டமாக கூறுகின்றேன். அதாவது சம்பந்தன் இந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற காலப்பகுதிக்குள்ளேயே இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டுவிடவேண்டும்.
அவ்வாறு சம்பந்தன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற காலப்பகுதியில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாவிடின் எமது வரலாற்றில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமலேயே போய்விடும்.
இதனை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும். எனவே சம்பந்தன் பாராளுமன்றத்தில் இருக்கின்ற காலத்திலேயே இந்தப் பிரச்சினையை தீர்த்துவிடவேண்டும். சுதந்திரக் கட்சி என்ற வகையில் இதில் அர்ப்பணிப்புடன் செயற்பட நாங்கள் தயாராக இருக்கின்றோம். இதுவே எம்மைப் போன்ற மிதவாத தலைவர்களின் நோக்கமாகும்.
கே:காணாமல் போனோர் தொடர்ந்தும் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்தக்கோரி போராடிவருகின்றனர். இதற்கு என்ன தீர்வு?
ப: இது மிகவும் உணர்வுபூர்வமான விடயம். இதில் உள்ள யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 1988 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். தற்போது வடக்கு கிழக்கு யுத்தத்தில் பலர் காணாமல் போயுள்ளனர்.
யுத்தம் என்று வரும்போது இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறும். அவர்களை தேடுவதும் மிகவும் கடினமாகும். யார் கொண்டுபோனது ? என்ன நடந்தது என்று எதுவுமே தெரியவில்லை.
எனினும் ஏதாவது ஒன்றை செய்யும் நோக்கில் காணாமல் போனோர் குறித்த அலுவலகம் தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த அலுவலகம் அமைக்கப்படும். அதில் நஷ்டஈடு வழங்குவதற்கான வேலைத்திட்டங்களும் இடம்பெறும்.
கே: நாட்டில் இனவாத மதவாத செயற்பாடுகள் தலைதூக்குவதாக குற்றம் சுமத்தப்படுகின்றதே?
ப: நல்லாட்சி அரசாங்கம் இனவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்காது. சிங்களம் தமிழ் முஸ்லிம் எந்த தரப்பிலிருந்து இனவாதம் வெ ளிப்பட்டாலும் அதற்கு இடமளிக்கமாட்டோம்.
இந்த விடயத்தில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். யாருக்கும் சட்டம் பொதுவானது. எம்மை பொறுத்தவரையில் வடக்கில் விக்கினேஸ்வரனும் சிவாஜிலிங்கமும் இனவாதம் செய்துகொண்டிருக்கின்றார்கள். அதேபோன்று தெற்கிலும் சிலர் உள்ளனர். ஆனால் நாம் எந்தவிதமான இனவாத செயற்பாடுகளுக்கும் இடமளியோம்.
கே: 2017 ஆம் ஆண்டில் ஆட்சியை பிடிப்பதாக மஹிந்த கூறியுள்ளாரே?
ப: அவர் அதனை எவ்வாறு செய்கின்றார் என்று பார்ப்போம்.
கே:கிராம மட்டத்தில் மஹிந்தவுக்கு ஆதரவு அதிகம் உள்ளதாக கூட்டு எதிரணி கூறுகின்றதே?
ப: யுத்தத்தை முடித்தவர் என்ற வகையில் நாமும் அவரை நேசிக்கின்றோம். ஆனால் அவர் சுதந்திரக் கட்சியில் இருக்கவேண்டும். பிரிந்து சென்றால் நாம் எமது பிரயோகங்களை செய்வோம்.
கே:2015 ஆம் ஆண்டு ஏன் மஹிந்த தோற்றார்?
ப: அதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு சில காரணங்களை கூறுகின்றேன். வடக்கு மாகாணத்துக்கு மஹிந்த சிறந்த சேவையாற்றினார். ஆனால் அம்மக்களின் மனங்களை வெல்லவில்லை.
அதனால் மஹிந்த என்னதான் செய்தாலும் தமிழ் மக்கள் தக்க சமயம் வரும்வரை காத்துக்கொண்டிருந்தனர். சந்தர்ப்பம் வந்ததும் மஹிந்தவை எதிர்த்து வாக்களித்தனர். அதேபோன்று முஸ்லிம் மக்களும் மஹிந்த எதிர்த்து வாக்களித்தனர். அளுத்கம சம்பவத்தில் முன்னைய அரசாங்கம் உரிய முறையில் செயற்படவில்லை. இதனால் முஸ்லிம் வாக்குகளை இழந்தார்.
மஹிந்த அன்று 52000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கினார். மேலும் நான் எனது கரங்களினால் அன்று 7000 பேருக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கினேன்.
அந்த மோட்டார் சைக்கிள்களில் மஹிந்தவின் படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை பெற்றவர்கள் உடனடியாக மஹிந்தவின் படங்களை அகற்றினர். நான் உடனே இதனை மஹிந்தவுக்கு தெரியப்படுத்தினேன்.
எனினும் அப்போதுகூட நிலைமையை யாரும் ஊகிக்கவில்லை. மேலும் சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டமை பெரும்பான்மை மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இவைதான் பிரதான காரணங்கள். மேலும் சில காரணங்களும் காணப்பட்டன.
கே: 2009 ஆம் ஆண்டின் பின்னரான நிலைமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
ப: 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்ததும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இரண்டு பாதைகள் காணப்பட்டன. யுத்தத்தினால் தமிழ் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்தனர். தெற்கில் நாமும் 1971 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் கஷ்டப்பட்டோம்.
இந்நிலையில் வடக்கு மக்கள் 2009 ஆம் ஆண்டு கஷ்டப்பட்டார்கள். அந்த காயங்களை ஆற்ற முன்னைய அரசாங்கம் எந்தத் திட்டத்தையும் வகுக்கவில்லை. நாங்களும் அந்த அரசாங்கத்தில் இருந்தோம்.
ஆனால் காயப்பட்ட மக்களின் காயங்களை ஆற்ற முன்னைய அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. எனவே 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியானது தமிழ் மக்களின் வடுக்களை ஆற்றாத காலப்பகுதியாகவே அமைந்தது என்று கூறலாம்.
கே:நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்ன?
ப: சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படாத வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் திருத்தங்களை செய்யவேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி புதிய அரசியலமைப்பு குறித்து பேசுகின்றது. இதில் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுக்கப்படவேண்டும்.
வீரகேசரி நாளிதழ்