Breaking News

சிவாஜிலிங்கம், ரிஷாட், ஞானசாரருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்



இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு கலங்கம் ஏற்படும் வகையில் பேசப்பட்ட கருத்துகள் தொடர்பில், இதுவரையில் 21 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார். 

இக்குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் என்.

கே.சிவாஜிலிங்கம், அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோருக்கு எதிரான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (21) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது கருத்துரைக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“தேரர் ஒருவரைக் கைது செய்வதற்கும் சாதாரண பொதுமகன் ஒருவரைக் கைது செய்வதற்குமிடையில் பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றமையாலேயே ஞானசார தேரரை எம்மால் கைது செய்யமுடியாது போனது” என்றார்.

“பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து, சிவில் இடங்களுக்கு சர்வ சாதாரணமாக பொலிஸாரால் செல்ல முடியும். ஆனால், இந்த நடைமுறை விகாரைகளுக்குள் சாத்தியப்படாது. அதேபோல், ஒரு குற்றத்துக்காக பொதுமகன் ஒருவரைக் கைது செய்வதற்கும் தேரர் ஒருவரைக் கைது செய்வதற்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாகவே, எம்மால் ஞானசார தேரரைக் கைதுசெய்வதில் தாமதங்கள் ஏற்பட்டன என்பதை, அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இனவாதச் செயற்பாடுகள் தொடர்பில் எமக்கு இரண்டு வகையான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் முதலாவது வகையான, இனவாதத் தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு இணங்க இதுவரை 12 சிங்களவர், இரண்டு முஸ்லிம்கள், ஒரு தமிழர் என மொத்தமாக 15 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“ இனவாத மற்றும் வெறுப்புப் பிரசாரங்கள் குறித்து இதுவரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள 21 முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளையும் நாம் ஆரம்பித்துவிட்டோம். இனவாதத்தை எவர் வெளியிட்டாலும் அவருக்கு எதிராக பாரபட்சம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் தற்போதே இதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. இதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனையையும் நாம் பெற்றுக்கொள்வோம்” என்றார்.