காணாமல்போனோர் பணியக திருத்தச்சட்டம் ஒரு மனதாக நிறைவேறியது
காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்குதல், நிர்வகித்தல் மற்றும் செயற்பாடுகளை நீக்குதல் தொடர்பான திருத்தச்சட்டம் நேற்று சி்றிலங்கா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சிறிலங்கா பிரதமர் நேற்று நாடாளுமன்றத்தில் இந்த திருத்தச்சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றியிருந்தார்.
காணாமல் போனோர் பிரச்சினைக்கு விரைவில் முடிவு காணும் நோக்கில் இந்த திருத்தச்சட்டமூலத்தை சமர்ப்பிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து உறுப்பினர்கள் பலரும் உரையாற்றினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவின் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரே, பணியகத்துக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
சிறிலங்கா படையினர் மாத்திரமன்றி, காணாமல்போனவர்கள் விடயத்தில் விடுதலைப் புலிகளும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
விவாதங்களை அடுத்து, இந்த திருத்தச்சட்டம் வாக்கெடுப்பின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.