வெறுப்புணர்வைத் தூண்டுவோரை தண்டிக்க வேண்டும் – சிறிலங்காவுக்கு மேற்குலகம் அழுத்தம்
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் குற்றங்களை தடுத்து நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு மேற்குலக இராஜதந்திரிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
கடந்த மாதத்தில் முஸ்லிம்க்கு சொந்தமான வணிக நிறுவனங்கள், பள்ளிவாசல்கள், மையவாடி என்பனவற்றில் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வெறுப்புணர்வு செயற்பாடுகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்று மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேற்குலக நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் நேற்று கொழும்பில் உள்ள தேவதஹக பள்ளிவாசலுக்குச் சென்று முஸ்லிம் அரசியல் மற்றும் மதப் பிரமுகர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் துங் லாய் மார்கே மற்றும் அவுஸ்ரேலியா, கனடா, நெதர்லாந்து, நோர்வே, தென்னாபிரிக்கா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
இதன் போது கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் துங் லாய் மார்கே, குற்றவாளிகளை அரசாங்கம் விரைவாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வெறுப்புணர்வைத் தூண்டும் குற்றங்களில் ஈடுபடுவோர் தண்டனையில் இருந்து தப்பிக்காத நிலையை சிறிலங்கா அரசாங்கமும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டியது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவரும் முக்கியமான பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்னமும், சிறில்ஙகா காவல் துறையினரால் கைது செய்யப்படாத நிலையிலேயே மேற்குலக தூதுவர்கள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர்.