முதலமைச்சரை மாற்றுமாறு கோருவது வெட்கப்பட வேண்டிய செயல்: குகவரதன்
நிரந்த அரசியல்தீர்வு ஒன்று கிடைக்கும் வரை தேசிய இயக்கம் பேன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மாறாக ஆளுநரை சந்தித்து நம்பிக்கையில்லா பிரேரணை கொடுத்து முதலமைச்சரை மாற்றுமாறு கோருவது வெட்கப்பட வேண்டிய செயல் என மேல்மாகாண சபை உறுப்பினர் சன் குகவரதன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் குழப்ப நிலைமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உரிமைக்காக 30 ஆண்டுகால போரில் இரத்தம் சிந்திய பிரதேசம் ஒன்றில் சாதாரண அரசியல்வாதிகளைப் போன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் செயற்பட முடியாது. யுத்தத்தின் பக்கவிளைவுகளுக்குக் கூட இன்னமும் உரிய முறையில் தீர்வு முன்வைக்கப்படவில்லை.
ஆகவே இந்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகம் ஒன்றின் அரசியல் தலைவர்கள் தமக்குள்ளே மோதிக்கொள்வது கவலையானது. தென்பகுதி சிங்கள இனவாதிகளுக்கும் அது வாய்ப்பாக அமைந்துவிடும். அரசியல் தீர்வை மேலும் பிற்போடுவதற்கு நல்லாட்சி அரசாங்கத்துக்குக் கூட வாய்ப்பாக அமைந்துவிடும்.
ஆகவே மக்களின் மன நிலையை உணர்ந்து நீதியரசர் விக்னேஸ்வரனின் கரங்களை பலப்படுத்தும் செயற்பாடுகளை தமிழ் மக்களும் சிவில் அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும் பிழையான அரசியல் பாதையில் செல்லும் தமிழரசுக் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து அமைதியான சூழலை உருவாக்க முற்பட வேண்டும்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தென்பகுதியில் உள்ள சாதாரண அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் போன்று செயற்பட முடியாது. நிரந்த அரசியல்தீர்வு ஒன்று கிடைக்கும் வரை தேசிய இயக்கம் பேன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மாறாக ஆளுநரை சந்தித்து நம்பிக்கையில்லா பிரேரணை கொடுத்து முதலமைச்சரை மாற்றுமாறு கோருவது வெட்கப்பட வேண்டிய செயல்.
ஆகவே அந்த மக்களின் வாக்குகளை பெற்று பதவிக்கு வந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தியாக மனப்பான்மையுடன் செயற்பட வேண்டும். தென்பகுதியில் செயற்படும் நாங்கள் அரசியல்வாதிகள் ஆனால் நீங்கள் இரத்தம் சிந்திய பூமியை பாதுகாக்கும் காவலர்கள் என்று கருதி செயற்படுங்கள் என சன் குகவரதன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.