Breaking News

“வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பியிருந்தேன்“ – விக்கி கவலை!



வெளுத்ததெல்லாம் பால் என்ற எண்ணம் தம்மிடம் இருப்பதால் எல்லோரையும் நம்பியிருந்தாகவும், இந்த எண்ணத்தில் தொடர்ந்தும் இருப்பதாகவும், வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிராக வடமாகாண சபையின் 22 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ள நிலையில், அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் தமிழரசுக் கட்சியின் தலைமையுடன் அதாவது இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோருடன் தமக்கு எந்தவித முரண்பாடுகளும் இல்லை எனவும் கூறினார்.

வடமாகாண சபையின் நடவடிக்கைகள் நிர்வாக ரீதியானதாக காணப்படுவதாகவும் அதனால் தாம் அரசியில் கட்சிகளுடன் கூடிய தொடர்புகளை பேணுவதில்லை எனவும் தெரிவித்தார்.

சிந்தனையில் தாம் ஒரு அரசியல்வாதி இல்லை எனவும் ஆதலால் தமக்கு கட்சி முக்கியம் அல்ல எனவும் மாறாக மக்களே முக்கியமானவர்கள் எனவும் விக்னேஸ்வரன் தெளிவுபட கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த வடமாகாண முதல்வர் ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பது நியாயமானது எனவும் ஆனால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத ஏனைய இரு அமைச்சர்களுக்கு எதிராக எவ்வாறு நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என இரா.சம்பந்தன் தம்மிடம் வினவியதாகவும் கூறினார்.

ஏனைய இருஅமைச்சர்களுக்கு எதிராக சாட்சியங்களை முன்வைக்க சாட்சியாளர் விரும்புவதாகவும் அதேபோல் அவர்களுக்கு எதிராக மேலும் பலபுதிய எழுத்து மூலமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தாம் சம்பந்தனிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

எனவே அந்த இருவரும் தொடர்ந்தும் அமைச்சு பதவிகளில் இருக்கலாம் எனவும் ஆனால் அவர்கள் அமைச்சின் அலுவலகங்களுக்கு செல்ல கூடாது எனவும் தாம் சம்பந்தனிடம் எடுத்து கூறியதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஆனாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தவறு என அவர் கூறியதாகவும் அதற்கு தாம் நடவடிக்கை எடுத்திருப்பது சரி என எடுத்து கூறியதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.