இராணுவ நீதிமன்ற விசாரணையில் குற்றவாளியாக காணப்பட்ட பிரிகேடியர் குணவர்த்தன
ரதுபஸ்வெல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை குற்றவாளியாக கண்டு, அவரைப் பதவியிறக்கம் செய்யுமாறு இராணுவ நீதிமன்றம் அளித்த பரிந்துரையை சிறிலங்கா இராணுவத் தளபதி நடைமுறைப்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீர் கோரிப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது 2013 ஓகஸ்ட் 01ஆம் நாள் சிறிலங்கா இராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். இதில் 3 பேர் பலியாகினர். 33 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் கழித்து, சிறிலங்கா இராணுவத் தளபதி ஆறு பேர் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றை அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார்.
இராணுவ நீதிமன்றத்தின் பூர்வாங்க விசாரணைகளில், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவைக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டது. அவரை பதவியிறக்கம் செய்யுமாறும் இராணுவ நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.
எனினும், பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன மீது சிறிலங்கா இராணுவத் தளபதி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ரதுபஸ்வெல துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு நேற்று கம்பகா நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றிய விபரங்கள் தெரியவந்தன.
அதேவேளை, நேற்றைய விசாரணைகளின் முடிவில் பிரிகேடியர் குணவர்த்தனவை ஜூன் 28ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.