மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடும் அதிகாரம் இல்லை – மகிந்த தேசப்பிரிய
மாகாணசபைத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கு அமைச்சர்களுக்கோ வேறு எவருக்குமோ அதிகாரம் இல்லை என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
‘ஒரு மாகாணசபையின் பதவிக்காலம் முடிந்து ஒரு வாரத்துக்குள், புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும்.
மாகாணசபைத் தேர்தலைப் அண்மையில் ஏற்பட்டது போன்ற பாரிய அனர்த்தம் அல்லது பிரபலமான ஆணை அல்லது நீதிமன்ற தீர்ப்பினால் மாத்திரமே பிற்போட முடியும்.
ஒரு அமைச்சரோ, அல்லது வேறு எந்த நபரோ மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கு சட்டத்தில் அதிகாரம் வழங்கப்படவில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில், கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளின் பதவிக்காலம், எதிர்வரும், செப்ரெம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.