Breaking News

’கடமையை மறந்த தமிழ்த் தலைமைகள்’

தற்போது நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்தங்களின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களது கடமைகளைப் புறக்கணித்துள்ளனர் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சி, குற்றஞ்சாட்டியுள்ளது.


எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்தியில் வந்து, அவர்களின் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளவோ அல்லது, அம்மக்களுக்காகக் களமிறங்கி வேலை செய்வதையோ தட்டிக்களித்துள்ளமை, வருத்தமளிக்கிறது என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில், தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களின் கரையோரப் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்ட போது, அவர்களுக்கு, சிங்கள மக்களே உதவிபுரிந்தனர். அதேபோன்று, இன்று தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களும், எமது மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது செய்நன்றி மறவாமற் செயற்படுவார்கள் என்று எதிர்ப்பார்த்திருந்தோம். ஆனால், அவ்வாறு இடம்பெறாமை கவலையளிக்கிறது' என்றார்.

'இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ, பாதிக்கப்பட்ட மக்களுக்காக எதையும் செய்வதை நாம் காணவில்லை. நிவாரணம் கொண்டுவராவிட்டால் பரவாயில்லை. ஆனால், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் முன்னால் வந்து, பாதிக்கப்பட்ட மக்களுடன் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கலாம்.

இவர்களது நடவடிக்கைகள், இந்நாட்டின் இனவாதத் தலைவர்களாகவே அவர்கள் உள்ளனர் என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறாகவே தொடர்ந்து செயற்படுவார்களாயின், நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது போகும்' என, உதய கம்மன்பில மேலும் குறிப்பிட்டார்.