திருமுருகன் காந்தி விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்
குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இதன்போது, ‘நினைவேந்தல் செய்தவர்கள் குண்டர்களா?’, ‘நினைவேந்தல் செய்வது தமிழர்களின் உரிமை! தமிழக அரசே நசுக்காதே’, ‘ஈழத்தமிழர்களின் ஆதரவாளர்களை விடுதலை செய்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆதரவாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், சட்டத்தரணி சுபாஷ் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைத்தமைக்காக மே – 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.