Breaking News

முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெற்றது தமிழ் அரசுக் கட்சி



வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளுனரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் மீளப் பெற்றுள்ளனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களால் கடந்த வாரம், நமபிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது. இதையடுத்து வடக்கு அரசியலில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, மதப் பெரியார்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது.

இந்தநிலையில், வடக்கு மாகாணசபையின் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள், ஆளுனர் ரெஜினோல்ட் குரேயை இன்று சந்தித்து, தாம் சமர்ப்பித்த முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெற்றுக் கொண்டனர்.

மாகாணசபை உறுப்பினர்களின் சார்பில் சயந்தன் இதனை மீளப் பெற்றுக் கொண்டார். இதையடுத்து, இந்த விவகாரத்தில் இருந்து வந்த இழுபறிகள் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளன.