கூட்டமைப்பு பிளவுபடுவதை அனுமதிக்க முடியாது: வியாழேந்திரன்
தமிழ் மக்களால் ஏகபிரதிநிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ஒரு மாகாண சபையை கொண்டு நடத்துவதில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் என்றால் எப்படி இவர்கள் வடக்கிகு ழக்கு இணைப்பைப் பற்றி பேச முடியும் என தென்னிலங்கை ஊடகங்களும், இணையத்தளங்களும் கேலித்தனமாக பேசுகின்ற நிலைமைக்கு வடக்கு மாகாணசபை நிலவரம் சென்றிருப்பது தமிழ் மக்களுக்கு பாதிப்பையும், பெரும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
எங்களுடைய கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியை பொறுத்தமட்டில் எங்களுடைய வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கௌரவ முதலமைச்சர் அவர்களுக்கு சார்பாகவே கையொப்பமிட்டிருக்கின்றார்கள். எந்தவிதத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் ஏகபிரதிநிதியாக இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடைந்துபோக வேண்டும் என தென்னிலங்கையிலும், வடக்கு கிழக்கிலும், முழு இலங்கையிலும் பலர் வேலை செய்துகொண்டிருக்கையில் இன்று ஏற்பட்டிருக்கின்ற வடக்கு மாகாணசபை விவகாரம் அவர்களுக்கு ஒரு பெரிய வழியை திறந்துவிட்டுள்ளது. இதை பெரும் அவமானமாக நான் கருதுகின்றேன்” என்றார்.