காணாமல் போனோர் அலுவலகத்தினூடாக வழக்குத் தொடரப்பட மாட்டாது – பிரதமர்
காணாமல் போனோரை தேடுவது மட்டுமே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் கடமையென தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குறித்த அலுவலகத்தினூடாக யாருக்கெதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட மாட்டாதென தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த அலுவலகம் தொடர்பாக பிரதமர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக யுத்த காலப்பகுதியின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் தேடி பார்ப்பதே பிரதான கடமையும் அதிகாரமும் ஆகும். காணாமல் போனவர்களை தேடுவதனை தவிர எந்தவொரு அதிகாரமும் காணாமல் போனோர் காரியாலயத்திற்கு கிடையாது. காணாமல் போனவர்கள் தொடர்பிலான சாட்சிகளை பெற்றுக்கொண்டு அதன்மூலம் காணாமல் போனவர்கள் எங்கு உள்ளனர் என்பது தொடர்பில் தேடப்படும்.
யுத்தத்தின் போது காணாமல் போன ஒருவரை கண்டுபிடித்த பின்னர், தான் உயிரோடு இருப்பதாக உறவினருக்கு கூற வேண்டாம் என சம்பந்தப்பட்ட நபர் கூறினால், எக்காரணம் கொண்டும் அவர்கள் தொடர்பான விபரத்தை உறவினர்களுக்கு வெளியிடுவதற்கு காணாமல் போனோர் அலுவலகத்திற்கு அதிகாரமில்லை.
யுத்தத்தின்போது காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதனை பற்றி மாத்திரமே நாம் ஆய்வு செய்வோம். அதற்கு மாறாக எக்காரணம் கொண்டும் எவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்ய மாட்டோம்.
யுத்தம் காரணமாக வடக்கில் வாழும் சாதாரண மக்கள் மாத்திரம் காணாமல் போகவில்லை. சுமார் 5000 படையினரையும் காணவில்லை. ஆகவே அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் நாம் ஆராய வேண்டியுள்ளது” என்றார்.