Breaking News

ரோமானியா: ஆட்சியமைத்த ஆறு மாதங்களில் அரசு கவிழ்ந்தது

ரோமானியா நாட்டில் இடதுசாரி அரசு ஆட்சி அமைத்து 6 மாதம் கூட ஆகாத நிலையில் பிரதமர் மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வியடைந்தது.


தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ரோமானியாவில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் சமூக ஜனநாயக கட்சி 46 சதவிகித வாக்குகள் பெற்று ஆட்சியமைத்தது. அக்கட்சியின் சார்பில் சோரின் கிரிண்டேனு பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில், நாட்டின் வளர்சிக்கு பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொந்த கட்சியைச் சேர்ந்தவர்களே குரல் எழுப்பினர்.

இதனால், உட்கட்சியில் ஏற்பட்ட அதிகாரப் போராட்டங்களைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிரதமர் உத்தரவிட்டார். இதனையடுத்து, அந்நாட்டு பாராளுமன்றத்தில் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள 240 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், வெறும் 7 வாக்குகளே அரசுக்கு ஆதரவாக கிடைத்தது. இதனால், அரசு கவிழ்ந்தது. ஆளும் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள் பலர் தங்களது பொறுப்புகளை ராஜீனாமா செய்து பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதிய பிரதமராக க்ளோசஸ் யோஹானிஸ் முன்மொழியப்படலாம் என்றும் அவர் தனது தரப்பு ஆதரவை 10 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் நிரூபிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.