ஐ.நா.வின் குற்றச்சாட்டுகளை இலங்கை நிராகரிப்பு
நீதிபதிகளின் சுயாதீனம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் மோனிக்கா பின்டோ, இலங்கையின் நீதிக் கட்டமைப்புத் தொடர்பாக முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகளை, அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்த அறிக்கை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுக் கூடியது. இதன்போது, விசேட அறிவிப்பொன்றை விடுத்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, இந்த அறிக்கை தொடர்பான உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
“இலங்கையில் வெறுமனே 7 நாட்கள் மாத்திரம் தங்கியிருந்த பின்டோவின் அறிக்கையில் காணப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நாம் ஆச்சரியமடைகிறோம்” என, நீதியமைச்சர் தெரிவித்தார்.
“இந்த அறிக்கை, இலங்கையின் நற்பெயரையும் நாட்டின் இறையாண்மையையும் பாதிக்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.
“அரசியலமைப்புச் சபை தொடர்பாக, பின்டோ வெளிப்படுத்தியிருந்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. பின்டோவின் அறிக்கையில், அரசியலமைப்புச் சபையின் அனைத்து உறுப்பினர்களும், ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற நிலையில், அது சுயாதீனமானது அன்று எனத் தெரிவித்திருந்தார்.
“அத்தோடு, அச்சபையில் அரசியல்வாதிகள் காணப்படுவதால், அது சுயாதீனமற்றது எனவும் தெரிவித்திருந்தார். ஆனால், மக்களின் விருப்பங்களுக்கு ஏற்பவே அன்றி, எந்த வெளிநாட்டு அமைப்பினதும் விருப்பங்களுக்காகவும், நியமனங்கள் மேற்கொள்ளப்படாது” என, அமைச்சர் தெரிவித்தார்.
தனது விமர்சனத்தைத் தொடர்ந்த அமைச்சர், “அரச சார்பற்ற அமைப்புகளால் வழங்கப்பட்ட தகவல்களைக் கொண்டே, பின்டோவின் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கலாம்” என்றும் சந்தேகம் வெளியிட்டார்.
“அவரது இந்த அறிக்கை தொடர்பான, இலங்கையின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை, ஐ.நாவுக்குத் தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்” என்று, அமைச்சர் மேலும் கூறினார்.