கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்து இயங்க முடிவு?
வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறாவிட்டால், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகியன நாடாளுமன்றத்திலும் தனித்து இயங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவருகின்றது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளதுடன் வடக்கு முதலமைச்சருக்கு தமது ஆதரவையும் வழங்கியுள்ளன.
இந்நிலையில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமிழரசுக் கட்சி உடனடியாக மீளப்பெறாவிட்டால் நாடாளுமன்றத்திலும், இம் மூன்று பங்காளிக் கட்சிகளும் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறி தனித்து இயங்குவது குறித்து பேசி வருவதாக தெரியவருகிறது.
இதேவேளை, குறித்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக சாதகமான முடிவுகள் எட்டப்படுமென தான் நம்புவதாக தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது