Breaking News

அரசுக்கு எதிராக போராடியவர்கள் சட்டப்படி கைது! – ரஷ்யா



அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டது சட்டப்படியான நடவடிக்கை தான் என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில் அளித்துள்ளது.

ரஷ்யாவில் அதிபர் விளாதிமிர் புதின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஊழலுக்கு எதிராக நேற்று அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது அதிபர் புதினுக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். புதினுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்திச் சென்றனர்.

போராட்டங்களில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை ரஷ்ய போலீசார் கைது செய்தனர். மாஸ்கோ நகரில் 850 பேரும், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சுமார் 500 பேரும் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி போராட்டங்களில் ஈடுபட்டதாக கூறி இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பத்திரிக்கையாளர்கள் சிலரும் கைதாகினர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரகள் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்க வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்தது. இது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை என்று குறிப்பிட்ட அமெரிக்கா, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்நிலையில், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டது சட்டப்படியான நடவடிக்கை தான், ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில் அளித்துள்ளது.

இது குறித்து மாஸ்கோ கிரிம்லின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஷ்கோவ் கூறுகையில், “முறையான அனுமதியில்லாமல் போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதனால் சட்டத்தை மீறியதற்காக முறைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.