அமைச்சர் சத்தியலிங்கத்துக்கு ஆதரவான போராட்டத்தில் மோதல்
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கத்துக்கு ஆதரவாக வவுனியாவில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு பேரணியின் போது மோதல் இடம்பெற்றுள்ளது.
பணியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அமைச்சர் சத்தியலிங்கத்துக்கு ஆதரவாக பேரணி இடம்பெற்றபோது அங்கு சென்ற இளைஞர் குழு, முதலமைச்சரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் அமைச்சரை முன்னிலையாகுமாறு வலியுறுத்தியதை அடுத்தே அங்கு மோதல் இடம்பெற்றிருக்கின்றது.
வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் நான்கு பேரின் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராசா ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் மீதான விசாரணை நிறைவடையும் வரை அவர்களை கட்டாய விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் பணித்துள்ளார்.
இந்நிலையில் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழரசுக் கட்சியின் சார்பில் வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது வடமாகாண சுகாதார அமைச்சருக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் பேராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே அங்கு வந்த இளைஞர் குழுவொன்று ஊழல் புரிந்த அமைச்சருக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என்றும் முதலமைச்சரால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் விசாரணையில் முன்னிலையாகுமாறும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து போராட்டகாரர்களுக்கும் இளைஞர் குழுவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டதை அடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா உட்பட கட்சி ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.