பொறுப்புக்கூறலில் நழுவிட முடியாது! ஆளுநரின் கருத்துக்கு சுரேஷ் கண்டனம்
காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் தமது பிள்ளைகளை இராணுவமே கடத்தி சென்றது என 18 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் பொறுப்பற்ற விதத்தில் கருத்து தெரிவித்துள் ளமை கண்டனத்துக்குரியது என ஈ.பி.ஆர். எல்.எப் இன் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் பதிலளிப்பவர் ஆளுநராக இருக்க தகுதியற்றவர் எனவும் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த விசாரணையும் நடத்த முடியாது.
தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட தமிழ் இயக்கங்களும் ஆட்கடத்திலில் ஈடுபட்டன என்ற குற்றச்சாட்டை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே முன்வைத்திருந்தார்.
இது தொடர்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காணாமல் போனோரை தேடியறியும் ஆணைக்குழுவிடம் 24 ஆயிரம் பேர் வரையில் சாட்சியமளித்துள்ளனர்.
இதில் 18 ஆயி ரத்துக்கும் அதிகமானோர் இராணுவத்தினராலும், புலனாய்வு பிரிவினராலும் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் கடத்தலில் ஈடுபட்டார்கள். ஆகவே அவர்களும் பதில் சொல்ல வேண்டும். அவர்கள் சொல்லாவிட்டால் நாங்களும் சொல்ல முடியாது என கூறி பொறுப்புக்கூறலில் இருந்து நழுவிட முடியாது.
தமது பிள்ளைகள் எங்கே? யாரால் கைது செய்யப்பட்டார்கள்? யாரிடம் எப்போது ஒப்படைக்கப்பட்டார்கள்? என அனைத்து புள்ளி விபரங்களும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அதற்கான பதிலை வழங்காமல் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்காமல் தான்தோன்றிதனமாக பதிலை கூற முடியாது.
ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோரின் கொலைகள் கடத்தல்க ளின் பின்னணியில் இராணுவம் இருந்ததாக கூறப்பட்டு, இராணுவத்தினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இருக்க இராணுவம் தான் தனது பிள்ளைகளை கைது செய்தது என்று அனைத்து புள்ளிவிபரங்களோடும் அவர்களது பெற்றோர்கள் தகவல் வழங்கிய பின்னரும் ஏன் இதுவரை எந்த இராணுவத்தினரும் கைது செய்யப்படவில்லை.
ஒரு அரசாங்கம் ஒரு இயக்கம் ஒன்றோடு தன்னை ஒப்பிட்டு பேசி அந்த குற்றத்திலிருந்து தப்பித்து கொள்ள முடியாது. தமிழீழ விடுதலைப்புலிகளும் தான் கடத்திலில் ஈடுபட்டவர்கள். ஆகவே எம்மால் ஒன்றும் செய்ய முடியாது என ஒரு ஆளுநர் கூறியுள்ளதன் மூலம் அவருடைய கோமாளித்தனத்தின் உச்சகட்ட வெளிப்பாட்டை காட்டியுள்ளார்.
இந்த விடயத்திற்கு உயர் பொறுப்பில் உள்ள ஜனாதிபதி தான் பதில் சொல்ல வேண் டும். அதனை விட அந்த அரசாங்கத்தின் பிரதிநிதியாக உள்ள ஆளுநர் ஒருவர் பொறுப்பற்று பதில் கூற முடியாது. வடக்கு மாகாண ஆளுநர் தனது பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர்.
அவரது நேற்றைய (நேற்று முன்தினம்) கருத்து கண்டிக்கத்தக்கது என தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் பொறுப்பான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும் என வும் தெரிவித்துள்ளார்.