Breaking News

ஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரன் கையில் – மூத்த ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு

விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும்
(A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு இருக்கக்கூடிய அரசியல் முக்கியத்துவம்.

படை, பட்டாளமற்ற தளபதி போல் அதிகாரமற்ற மாகாணசபையின் முதல்வராக இருந்து கொண்டு அவரால் பெரிதாக எதனையும் சாதிக்க முடியாது என்பது ஓர் அடிப்படை முன்நிபந்தனையாகும். அதற்குள்ளாற்தான் அவரை நோக்க வேண்டும். “வெறுகொண்ட மனம் பிசாசுகளின் பட்டறை” “an idle mind is the devil’s workshop”என்பதுபோல செயற்பட அதிகாரமோ, வாய்ப்புக்களோ அற்றதாக மாகாணசபை இருப்பது மட்டுமன்றி கூடவே அது அரச இடையூறுகளுக்கு உரியதாக இருக்கும் நிலையில் அது போய் உறையும் இல்லமாக, குழம்பங்களை பிரவிக்கும் கருப்பையாகக் காணப்படும்.

இந்நிலையில் எத்தகைய திறமையுள்ளவராக இருப்பினும், எத்தகைய நல்மனம் படைத்தவராக இருப்பினும், வடமாகாண முதலமைச்சருக்கு இருக்கக்கூடிய வரையறைகளை கருத்தில் கொண்டு முதலமைச்சர் திரு, சி.வி.விக்னேஸ்வரனையும் அவரது பணிகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும்.

“அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பது இல்லையே,
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை….”

என்று பாரதியார் பாடியது நெருக்கடிகளைக் கண்டு அஞ்சாது நிமிரவல்ல மனிதர்களைப் படைப்பதற்காகவே.

இலங்கை அரசு வடமாகாணசபைக்கும் அதன் முதலமைச்சருக்கும் கொடுக்கவல்ல எந்த நெருக்கடிகளையும் கண்டு அஞ்சாது நீதியின் பேரால், நியாயத்தின் பேரால் ஈழத்தமிழர்களின் உரிமைக்கான குரலாய் அவர் விளங்குகிறார்.

அதிகாரமற்ற மாகாணசபையின் பின்னணியில், இராணுவத்தால் மக்கள் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் சூழலில், பொலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் மத்திய அரசின் இரும்புப் பிடிக்குள் இருக்கும் சூழலில் அவர் தமிழ் மக்களின் குரலாக இருப்பதைத் தவிர வேறு எதனையும் அவரால் பெரிதாக செய்திட முடியாது. ஆனால் இத்தகைய நெருக்கடி மிகுந்த சூழலில் அவர் தமிழ்த் தேசிய ஆத்ம பலத்துடன் அதற்காக தயங்காது குரல் கொடுப்பதை ஒரு முக்கிய சாதனையாக கருத்தில் கொள்ள வேண்டும்.

“குளங்கள் குழம்பும் போது குப்பைகள், மேலே கிளம்பும்” என்பது போல யுத்தத்தின் தொடர்ச்சியாய் தமிழ்ச் சமூகம் பெரிதும் குழம்பியிருக்கிறது. எங்கெல்லாம் யுத்தங்கள் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம் சமூகம் சீர்குலையும். பண்பாடு நலிவுறும். பிணங்களில் இரத்தம் உறிஞ்ச கழுகுகள் வருவது போல ஒரு யுத்த சூழலின் பின்னான சீர்குலைவின் போது மக்கள் சிந்திய இரத்தத்தை வைத்து பணம் பண்ண பல்வேறு சக்திகளும் எழுவது வரலாற்று இயல்பு.

குழம்பிய குளம் தெளிய குப்பைகள் அடங்கும் அல்லது பொழியும் மழையில் அவை அடியுண்டு போகும். எறிக்கும் வெய்யிலில் அவை காய்ந்தும் போகும். அத்துடன் வீசும் காற்றிலும் அவை கரைந்துபோய்விடும்.

சங்ககால யுத்தம் முடிந்ததும், முதலாம், இரண்டாம் உலக மகாயுத்தங்கள் முடிந்ததும் யுத்தம் நிகழ்ந்த பூமிகளில் இவையே நிகழ்ந்தன. சங்க காலத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சீர்குலைவுகளை சீர்செய்ய ஒரு சங்கமருவிய காலம் தோன்றிய போல ஈழத் தமிழரின் வாழ்விலும் முள்ளிவாய்க்கால் யுத்தப் பேரழிவின் பின்னான காலச் சீரழிவுகளை, நம்பிக்கையின்மைகளை, விரக்திகளை, இலக்கற்ற வாழ்க்கைப் போக்கை சரிசெய்வதற்கு முன்னேற்பாடான ஓர் இடைமாறு காலகட்டம் வரலாற்று அகராதியில் உள்ளபடி நிகழ்கிறது.

அந்த இடைநிலைமாறு காலகட்டத்தில் (Transitional Period) எழுந்திருக்கும் ஒரு தலைவராக விக்னேஸ்வரன் காணப்படுகிறார். அந்த இடைநிலைமாறு காலகட்டம்தான் அடுத்து வரவல்ல ஆக்ககாலத்தை (Formative Period) பிரசவிப்பதற்கான கருப்பை.

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிந்த பின்பு ஜப்பானியர்கள் இதற்கு முன்னுதாரமான இடைமாறு காலகட்டத்தை உருவாக்கி அதனடிப்பவீயில் ஓர் ஆக்க காலத்தை பிரசவித்து உலகப் பெரும் பொருளாதார வல்லரசுகளில் ஒன்று என்ற ஸ்தானத்தை வடிவமைத்துக் காட்டியிருக்கிறார்கள்.

திரு. விக்னேஸ்வரன் ஓய்வு பெற்ற பின் விபத்தாகவே அரசியலுக்கு வந்த ஓர் அரசியல்வாதி என்பதை அவர் தன் வாயால் தெளிவுறக் கூறியுள்ளார். அதனை இறைவன் செயல் என்றும் மேலும் அதற்கு இன்னொரு அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

அவர் விபத்தாகவே அரசியலுக்கு வந்த போது அவர் அரசியல் மேடையில் நடைபயிலத் தொடங்கும் ஒரு குழந்தையாகக் காணப்பட்டார். அப்போது அவரிடம் தொடக்க நிலைக்கு இருக்கக்கூடிய அரசியல் தளம்பல்கள் இருக்கவே செய்தன.

ஆனால் அவரின் அடிமனதில் உறைந்திருந்த தமிழ்த் தேசிய ஆத்மா தமிழ் மண்ணின் அரசியல் வெப்பத்தில் உருகி உயிர்பெற்றது. அவர் துணிச்சலுடன் தமிழ் மக்களின் தேசிய அபிலாசகளைப் பிரதிபலிப்பவரானார்.

போர்க்குற்ற விசாரணை பற்றிய இலங்கை அரசின் மாயாஜாலங்கள் முதலமைச்சரின் கண்களை அகலத் திறக்க வைத்தன. அவர் போர்க்குற்ற விசாரணைக்காக நீதி கோரும் குரலாக வடிவெடுத்தார். அப்போதுதான் இவரைக் கண்டு அரசும், அரசாங்கத்தோடு ஒத்துழைக்கும் சக்திகளும் அச்சமடையத் தொடங்கின.

ஆனாலும் அவர் தமிழ் மக்களின் அடிப்படை தேசிய அபிலாசைகளை பிரதிபலிக்கும் சின்னமாக தன்னை வடிவமைத்ததோடு அதற்காக குரல் கொடுப்பவராகவும் காட்சியளித்தார்.

ஒரு நூற்றாண்டிற்கும் மேலான தொடர் தோல்விகளையும், துயரங்களையும் அனுபவித்துவரும் பேரிழிப்பிற்கு உட்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களின் விடிவிற்கு வழி வகுக்க ஒரு முழுமைபடுத்தப்பட்ட அரசியல் வியூகம் அவசியம். அவற்றை வடிவமைப்பதில் ஈழத் தமிழ்த் தரப்பு இன்னும் வெற்றி பெறவில்லை.

ஒரு உன்னதமான கோட்பாடுகளும், அவற்றிற்குப் பொருத்தமான கோட்பாடுகளும் இன்றி ஓர் ஒடுக்கப்படும் இனம் விடுதலை பெறமுடியாது.
இத்தகைய பின்னணியில் தீபத்தை அணையவிடாது பாதுகாப்பது மட்டுமே முதற்கட்டத்தில் போதுமானதாகும். எப்படியோ விக்னேஸ்வரின் கையில் தமிழ்த் தேசிய அபிலாசையின் ஒளிச்சுடரான ஒலிம்பிக் தீபம் இருக்கின்றது என்பது மட்டும் உண்மை. இதனைக் கொண்டு அவர் வேகமாக பயணிப்பதற்கான வழிகளும், யுத்திகளும், செயற் போக்குக்களும் இன்னும் உருவாகவில்லை. ஆயினும் அந்த தீபத்தை அணையவிடாது காப்பாற்றியாக வேண்டும்.

அவர் இப்போது அபிமன்யூவைப் போல் எதிரிகளின் சக்கர வியூகத்திற்குள் அகப்பட்டிருக்கிறார். மகாபாரத்தில் அந்த வியூகத்தை உடைத்து அபிமன்யூவைக் காப்பாற்ற அப்போது காண்டீபனால் துணைநிற்க முடியவில்லை.

ஆனால் ஈழத் தமிழ் மண்ணில் எதிரிகளின் வியூகத்தை உடைக்கவல்ல தமிழ் மக்களின் பேராதரவு விக்னேஸ்வரனுக்கு உண்டு. எதிர்த்தரப்பினரின் எத்தகைய சூதுவாதுகளையும் தாண்டி தமிழ் மக்கள் நவீன காண்டீபன்கள் என எழுந்து முன்சென்றால் விக்னேஸ்வரனைப் பாதுகாக்க முடியும். விக்னேஸ்வரனை பாதுகாப்பது என்பது தமிழ்த் தேசிய சுடரை அணையவிடாது பாதுகாப்பது என்பதாகும்.

ஒருவேளை விக்னேஸ்வரனை எதிர் தரப்பினர் தோற்கடிப்பார்களேயானால் அபிமன்யூவின் இழப்பை தாங்கமுடியாது கோபாவேசம் கொண்டு வீரியத்துடன் போரிட்டு எதிரிகளை அழித்த காண்டீபன் போல தமிழ் மக்களின் கோபமும் எழுந்து எதிரிகளை அழிக்கவல்ல உக்கிரமான திரட்சியைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

முதலமைச்சர் என்ன தவறு செய்தார்? அவர் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரு தலைவன். அதிகாரமற்ற மாகாணசபையாக இருந்தபோதிலும் அதற்குள் காணப்பட்ட வாய்ப்புக்களுக்குப் பொருத்தமாக ஊழல் நிகழ்ந்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்ட நிலையில் மக்கள் தனக்கு அளித்த அதிகாரத்தின் பேரால் அந்த ஊழல்கள் சம்பந்தமான விசாரணையை நடத்த நெறிமுறைக்கு உட்பட்ட வகையில் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தார். அதுவும் சமூகத்தால் ஏற்றக்கொள்ளக்கூடிய, தகுதிவாய்ந்தவர்கள் என்று சமூகம் நம்புகின்ற முன்னாள் நீதிபதிகளையும், முன்னாள் அரசாங்க அதிகாரியையும் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை அவர் அமைத்தார்.

விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் ஒரு வரண்முறையின்படி விசாரணைகள் நடக்க உத்தரவிட்டார். விசாரணை அறிக்கையின் படி அவர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்பட்டார். மக்கள் தனக்கு அளித்த அதிகாரத்தை அதில் பிரயோகத்தார். அதில் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டலாம். அல்லது அதற்காக மக்கள் முன் நியாயங்களை உரைக்கலாம்.

ஆனால் அவர் நெறிமுறைப்படி ஊழலுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவரை பலியெடுக்க முயல்வது ஒரு தேசிய அவமானமாகும். இந்த தேசிய அவமானத்தை தமிழ்த் தேசிய இனம் ஒருபோதும் பொறுக்கமாட்டாது என்பது உண்மை. பாரதியார் கூறியது போல சிலவேளைகளில் “தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்” என்பதற்கு இணங்க சூது வாதுகளினால் அவர் தற்காலிகமாக தோற்கடிக்கப்பட்டாலும் வரலாற்றின் எழுச்சி அதனை மேவிச் செல்லும்.

“தர்மம் வெல்லும்” என்று கூறிக்கொண்டு வாழாதிருந்தால் தன்னியில்பில் தர்மம் வெல்லாது. தர்மத்தின் பேரால் அதற்காக செயற்பட்டால் மட்டுமே தர்மம் வெல்லும். எப்படியாயினும் தமிழ் மக்கள் உடனடியாகவோ, அல்லது காலந்தாழ்த்தியோவாயினும் இதனை செய்வார்கள்.

தமிழ் மக்கள் மத்தியில் நிர்வாகத் திறனுள்ள பலர் உண்டு. ஆயினும் அவர்களில் பெரும்பாலானோர் ஆட்சியாளரின் கட்டளைக்கு பணிந்து நிர்வாகம் செய்த பரிட்சியத்தைக் கொண்டவர்கள். இவர்கள் சரியான அரசியல் நெறிமுறையின் கீழ் பணிபுரியும் போது சாதனைக்குரிய நிர்வாகத்தை செய்யக்கூடியவர்கள். இவர்களைக் கண்டறிந்து பொருத்தமான உயர் நிர்வாகப் பதவிகளில் அமர்த்துவது நல்லது.

குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தன் பணிக்காலம் தடைபட்டுப் போன திரு. இ.செல்வின் போன்ற திறமையான நிர்வாகிகள் இப்போது தமிழ் மண்ணில் உண்டு. சமூக உணர்வும், சேவை மனப்பாங்கும், சமூகப் புழக்கமும், சமூக முகமுங் கொண்ட செல்வின் போன்ற அதிகாரிகளைக் கண்டறிந்து உயர் நிர்வாகப் பதவிகளில் அமர்த்த தமிழ்ச் சமூகமும் பொறுப்பு வாய்ந்த தலைவர்களும் முற்பட வேண்டும்.

மாகாணசபை முறையை ஓர் அரசியல் தீர்வாக ஒருபோதும் கருத முடியாது. உண்மையான அர்த்தத்தில் தனக்கு ஏற்பட்ட யுத்த அழுத்தத்தையும், கூடவே இந்திய தலையீட்டையும் எதிர்கொள்ளவல்ல ஒரு தந்திரோபாயமாக ஜே.ஆர். ஜெயவர்த்தன வடிவமைத்தார்.

அவர் மாகாணசபைகள் அமைப்பதை எந்த வகையிலும் விரும்பவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வு மேற்படி இந்தியாவின் கரங்களுக்கு ஊடான நிர்பந்தமாக எழுந்த போது அதனை எதிர்கொள்வதற்கான ஒரு கூரிய ஆயுதமாக மாகாணசபை முறையை வடிவமைத்தார்.

மாகாணசபை முறையானது தமிழருக்கு உரிமை வழங்குவதாகவும், அது சிங்கள மக்களுக்கு எதிரானதாகவும் தோற்றத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது. அரசியல் அர்த்தத்தில் அதன் உண்மை அப்படியல்ல.

தீர்வு காணவேண்டிய நிர்பந்தம் ஜே.ஆருக்கு ஏற்பட்ட போது மாகாணசபையே தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு கருவியாக வடிவமைக்க அவர் திட்டமிட்டார்.

இதன் மூலம் வடக்கு – கிழக்கு தற்காலிக இணைப்பு என்ற ஓர் ஆப்பை அதில் சொருகினார். சொருகிவிட்டு அதனை ஜனாதிபதி தனது பிரகடனத்தின் மூலம் வடக்கு – கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைத்தார். அது இந்திய அரசுக்கு திருப்பிதியாக அமைந்தது. ஆனால் ஜே.ஆர். சொருகிய ஆப்பை இந்திய அரசு அப்போது கண்டுகொள்ளத் தவறியது.

அந்த ஆப்பு பின்வருமாறு வடிவமைக்கப்பட்டது. வடக்கு – கிழக்கை தற்காலிகமாக இணைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. ஆனால் அந்த அதிகாரத்தை அவர் இலங்கை நாடாளுமன்ற அறிவித்தலுக்கு ஊடாக இணைக்க வேண்டுமே தவிர அரசாங்க இதழ் அறிவித்தல் மூலம் இணைக்க முடியாது.

ஆனால் ஜே.ஆர். இணைப்பு என்று கூறிக்கொண்டு அரசாங்க சபை அறிவித்தலுக்கு ஊடாக அதனை இணைத்தார். இதனை ஜே.ஆர். தெரியாமற் செய்யவில்லை. அவர் தெரிந்து கொண்டே இந்த பொடியை வைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. தருணம் வரும் போது அந்த பொடியைப் பயன்படுத்தி நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வடக்கு-கிழக்கை நிரந்தரமாக பிரித்திடலாம் என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்.

இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட பகைமையின் பின்னணியில் இந்தியாவின் கவனம் திசைமாறி இலங்கை அரசாங்கத்தோடு ஒத்துழைக்கும் சூழலில் சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பை நீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாக பிரித்தார்கள்.

அந்த நீதிமன்றத் தீர்ப்பில் அரசியல் அர்த்தத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பு பிழையென்று கூறப்படவில்லை. சட்ட நுணுக்க அர்த்தத்தில் அந்த இணைப்பானது அரசாங்க இதழ் மூலம் செய்யப்பட்டது தவறு என்ற அடிப்படையில் வடக்கு-கிழக்கு இணைப்பை பிரித்தார்கள். அப்படியாயின் முன்னைய ஜனாதிபதி விட்ட தவறை பின்னைய ஜனாதிபதியாக தீர்ப்பு வழங்கிய காலத்தில் பதவியில் இருந்த ச்நதிரிக பண்டாரநாயக்காவல் நாடாளுமன்ற அறிவித்தல் மூலம் இத்தவற்றை சரிசெய்திருக்க முடியும்.

ஆனால் சிங்களத் தலைவர்கள் அனைவரும் என்னதான் வெளிப்பூச்சுக்குப் பேசினாலும் செயற்பூர்வமான அர்த்தத்தில் சமூக அமைப்பு முறையிலான தொடர் இன அழிப்பிற்கு முற்றிலும் சாதகமானவர்கள் என்பதே உண்மை.
இப்போது வடக்கு-கிழக்கு மாகாணசபை செயற்பூர்வமான அர்த்தத்தில் தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராக, உரிமைகளுக்கு எதிராக எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நோக்குவோம்.

மாகாணங்கள் என்பது நிர்வாகப் பிரிவு. அவை அரசியற் பிரிவுகலல்ல. தமிழ்த் தேசிய இனத்தின் பாராம்பரிய பிரதேசம் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இரண்டையும் உள்ளடக்கியது. ஆனால் இந்த நிர்வாக மாகாணப் பிரிவை பயன்படுத்தி தமிழத் தேசிய இனத்தை அரசியல் ரீதியாக இரண்டுபடுத்தினார்கள்.

மத்தியில் தமிழ் மக்களுக்கு விரோதமான ஆட்சி இருக்கும் நிலையில் அரசியல் ரீதியாக வேறுபட்ட இந்த மாகாணங்களையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேசிய இனத்தை இரண்டாகத் துண்டாடும் அரசியல் நடைமுறையை உருவாக்கியிருக்கிறார்கள்.

இது மிக ஆபத்தான ஓர் இன அழிப்பு மூலோபாயமாகும். எது இலங்கை அரசுக்கு எதிரானதாக இந்தியாவால் நீட்டப்பட்டது போல் தோன்றியதோ அதையே தமிழின அழிப்பிற்கான ஏதுவாக மாற்றுவதில் சிங்களத் தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

அசோக சக்கரவர்த்தியின் பேரரச விரிவாக்கக் கொள்கையின் கீழ் பௌத்த மதம் ஓர் அதிக்க சின்னமாக இலங்கைக்கு வந்த போதிலும் அதனை இலங்கை அரசைப் பாதுகாப்பதற்கான கவசமாக்குவதில் அன்றைய இலங்கைத் மன்னர்கள் வெற்றிபெற்று அதற்கான இராஜதந்திர பாரம்பரியத்தை உருவாக்கினர்.

இதன்பின்பு பௌத்தமே சிங்கள அரசின் கவசமாக மாறி இன்றுவரை அதற்கான பணியை உள்நாட்டு ரீதியிலும், வெளிநாட்டு ரீதியிலும் நிறைவேற்றி வருகிறது. இத்தகைய இராஜதந்திர பாரம்பரியத்தின் நீட்சியாகவே இந்தியா இலங்கையிடம் தமிழ் மக்களுக்கான தீர்வுவென நீட்டிய போது அதனை ஏந்தி அதனைக் கருவியாகக் கொண்டே தமிழ்த் தேசிய இனத்தை கூருபோட்டு அழிக்கும் அரசியல் யுத்தியை ஜெயவர்த்தன கனகச்சிதமாக ஆரம்பித்து வைத்தார்.

ஆகவே அப்படிப்பட்ட மாகாணசபைக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு இருக்கின்றது என்று யாரும் கனவுகாண வேண்டியதில்லை. இம்மாகாணசபை எவ்வகையிலும் தமிழ் மக்களுக்கு பயன்படப் போவதில்லை. ஆனால் இதனை பயன்படுத்த ஓர் இடமுண்டு. அந்த இடம் இதன் வாயிலாக மக்களை ஜனநாயக அடிப்படையில் திரளாக்க முடிவதும் அதன் வாயிலாக தமிழ் மக்களுக்கான நியாயத்தை உள்ளும், புறமும் எடுத்துரைக்கவல்ல ஓர் ஏதுவாக பயன்படுத்துவதும் என்பதேயாகும்.

தற்போது முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பு ஜனநாயக வடித்திற்கு ஊடாக தமிழ் மக்களின் குரலை உலகரங்கில் முன்வைக்க இந்த மாகாணசபையை ஓரளவு பயன்படுத்தலாம்.

அந்த வகையில் தமிழ்த் தேசியத்தின் சின்னமாகவும், தமிழ் மக்களின் ஏகப்பெரும் ஆதரவைப் பெற்ற ஒருவராகவும் திரு. விக்னேஸ்வரன் காணப்படும் நிலையில் அந்த பலத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை நியாயபூர்வமான முறையில் முன்வைக்க இது உதவக்கூடும். அது தற்துணிவுள்ள, கண்ணியமிக்க தேசிய உணர்வு கொண்ட ஒரு தலைவரின் கீழ்தான் சாத்தியம்.

விக்னேஸ்வரனுக்கு இருக்கக்கூடிய பலம், பலவீனம் வரையறைகள் என்பனவற்றிற்கு அப்பால் அவர் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் அடி ஆத்மாவை பிரதிபலிக்கவல்ல இயல்புகளைக் கொண்டவராகக் காணப்படும் நிலையில் அந்த இயல்பு மட்டுமே இப்போது தமிழ்த் தேசிய இனத்திற்கான காப்பரணாகும். அந்த காப்பரணை உடையவிடாது பாதுகாப்பதன் மூலம் தமிழ் மக்கள் அடுத்த வரவல்ல ஆக்க காலத்தில் கால்பதிக்க முடியும்.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்