Breaking News

அறிவுக்களஞ்சியம் அழிக்கப்பட்டு ஆண்டுகள் 36



“புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பலம் வாய்ந்த ஆயுதங்கள் புத்தகங்களே…” -விளாடிமிர் லெனின்-

தமிழினத்தின் வரலாற்றுப் பதிவுகளின் ஆதாரமாக, தலைநிமிர்ந்து மிடுக்குடன் காணப்பட்ட யாழ்.பொது நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் ஆண்டுகள் 36.

தெற்காசியாவின் மாபெரும் அறிவுக்களஞ்சியமாக திகழ்ந்த யாழ்.பொது நூலகம், கடந்த 1981ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு எரியூட்டப்பட்டு, மறுநாள் அதாவது இதே போன்றதொரு நாளில் காலை வேளையில் நிறம் மாறி, உரு மாறி சாம்பாலாய் கிடந்தது.

அக்காலப்பகுதியில் தலைவரித்தாடிய வன்முறைக்கு, யாழ். பொது நூலகத்தின் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அரிய நூல்கள் இரையாகி, தமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத சின்னமாக மாறிவிட்டது.

அக்காலப்பகுதியில் யாழில் இருந்து வெளிவந்த அச்சுப் பதிப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தல் காணப்பட்ட நிலையில், தமிழினத்தை கருவறுக்க மேற்கொண்ட திட்டமிட்ட நாசகார செயலாகவே இந்த சம்பவம் பாதிவாகியுள்ளது.

1933ஆம் அண்டு தனி நபர்களால் சிற்சிறு புத்தகங்களை கொண்டு கட்டியெழுப்பப்பட்ட யாழ். பொது நூலகம் பிற்காலத்தில் பரந்து விரிந்து பல நூல்களையும், யாழில் இருந்து வெளிவந்த பத்திரிகைகளின் மூலப்பிரதிகளையும், பழங்காலத்து ஓலைச்சுவடிகளையும், இன்னும் பல அரிய படைப்புக்களையும் தாங்கி ஒரு முழுமையான நூலகமாக உருப்பெற்று, 1959ஆம் அண்டு முதலாவது கட்டடம் திறந்துவைக்கப்பட்டது.

தமிழை மட்டுமன்றி தமிழினத்தின் பெருமையையும் உலகிற்கு அடையாளப்படுத்தும் பொக்கிஷமாக காணப்பட்ட இந் நூலகத்தை வேரோடு அழித்தமை, ஒவ்வொரு தமிழரின் நெஞ்சையும் உலுக்கியது.

காரணம் தமிழினத்தின் வேர் ஒவ்வொன்றாக அறுக்கப்பட்டு வந்த போதும், அறுக்க முடியாத ஆணி வேராய் காணப்பட்ட கல்வியை தமிழ் மக்களிடம் இருந்து பிடிங்குவதை அப்போதைய அரசாங்கம் குறியாக கொண்டு இந்த வேலையை திட்டமிட்டு செய்தது. கல்வியறிவை சிதைத்தால் தம்மை எதிர்க்கவோ எதிர்கேள்வி கேட்கவோ மாட்டார்கள் என்ற எண்ணத்தில் நிறைவேற்றப்பட்ட செயலாகவே இதனை எண்ண வேண்டியுள்ளது.

தற்காலத்தில் யாழ். பொது நூலகம் மீள கட்டியெழுப்பப்பட்ட போதிலும் அரிய ஆவணங்கள் அழிந்து போக, பிற்காலத்தில் வந்த புத்தகங்களை கொண்டு தற்போது மீண்டும் செயற்பட்டு வருகின்றது.

இதுபோன்றதொரு நாசகார செயல் இனியும் வந்துவிட கூடாதென்ற நோக்கத்தல் கடந்த 2005ஆம் அண்டு மின் நூலகம் ஒன்று உருவாக்கப்பட்டு சுமார் 150,000 நூல்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் சகல உரிமைகளும் பறிக்கப்பட்டபோதிலும், கல்வி என்ற அழியாச் சொத்தை எவராலும் பிரிக்க முடியாது என்பதை தமிழ் சமூகம் அவ்வப்போது பறைசாற்றி வருகின்றது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் அதனை விட சக்தி மிக்க ஆயுதமாய் காணப்படும் நூல்களை கற்றறிவது எமக்கு கிடைத்துள்ள இன்னுமோர் சந்தர்ப்பமாகும். இந்நிலையில், வாசிப்பு உள்ளிட்ட பழக்கங்கள் ஊடாக அறிவைப் பெருக்கி தமிழினத்தின் பெருமையை கல்வியின் ஊடாக உலகிற்கு பறைசாற்ற கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்படுவது அவசியம்.