இந்தியாவில் பெற்றோருக்காக காதலை தியாகம் செய்யும் பெண்கள்!-உச்ச நீதிமன்றம்
ராஜஸ்தான் மாநிலத்தில், 1995-ம் ஆண்டு ஒரு காதல் ஜோடியினர் ஆத்மார்த்தமாக காதலித்து வந்துள்ளனர். ஜாதி வேறுபாடு காரணமாக பெண்ணின் பெற்றோர் இந்த காதலை ஏற்கவில்லை. ஒரு கட்டத்தில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனாலும், பெண்ணின் பெற்றோருடைய எதிர்ப்பால், காதல் தம்பதியர் மனம் உடைந்து போய் தற்கொலை செய்து, உயிரை மாய்த்து விட தீர்மானித்தனர். இருவரும் தாமிர சல்பேட் என்னும் ரசாயனத்தை தின்றனர். ஆணை விட பெண் அதிகமாக தின்றதால் அவரது உடல்நிலை மோசமானது. உதவி தேடி, ஆண் வெளியே சென்றார். திரும்பி வந்தபோதோ அந்த பெண் துக்கில் தொங்கினார். அதில் இருந்து மீட்டு, அந்தப் பெண்ணை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றபோது அவரது உயிர் பிரிந்து விட்டது.
ஆனால் காதல் கணவர், பிழைத்து விட்டார்.
இதையடுத்து அந்தப் பெண்ணை, காதல் கணவர் கொன்று விட்டதாக கோர்ட்டுக்கு வழக்கு போனது. வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
ஆனால் அவர் உச்ச நீதிமன்றில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து, அவரை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தனர்.
நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ள முக்கிய அம்சங்கள்:-
* கிரிமினல் வழக்குகளில் அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக்கூடாது. இந்த வழக்கில் அரசு தரப்பில், குற்றம் சுமத்தப்பட்டவர் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை.
* நமது நாட்டில் பெற்றோரின் முடிவை ஏற்று, பெண்கள் தங்கள் காதலை தியாகம் செய்கிற நிலை உள்ளது. விருப்பம் இல்லை என்றால் கூட, இப்படி பெண்கள் செய்வது பொதுவான நிகழ்வாக உள்ளது.
* இந்த வழக்கை பொறுத்தவரையில், அந்தப் பெண், தன் காதலர் மீது ஆழமான காதல் கொண்டிருக்கிறார். அவரையே திருமணம் செய்து கொள்ள எண்ணி இருக்கிறார். இந்தக் காதல் காரணமாக தனது பெற்றோர் நடந்து கொண்டவிதம், அவரை குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்று காதலரை திருமணம் செய்து கொள்ள வைத்துள்ளது.
* ஒரு ஆண் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாதபட்சத்தில், அவள் வேறு ஒரு ஆணுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதால் அவளை கொல்கிற அளவுக்கு செல்லக்கூடும். ஆனால் இந்த வழக்கில் அதற்கான ஆதாரம் இல்லை. இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.