நீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு முதலமைச்சரிடம்
சுதந்திரமானதும் நீதியானதுமான விசாரணை நடைபெறுமானால் எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தாமல் முழு ஒத்துழைப்புடன் விசாரணைக்கு ஆதரவு வழங்குவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் உறுதியளித்துள்ளார்.
ஏற்கனவே வட மாகாண சபையின் நிதியிலோ, நிர்வாகத்திலோ எந்தவொரு தப்பான நடவடிக்கை மற்றும் நிதி தொடர்பிலான கையடல்களையும் செய்யவில்லை என்பதை மீண்டும் மக்களுக்கு உறுதிபடத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுவதாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் நேற்றைய தினம் வடமாகாண முதலமைச்சருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தார்.
இதன்பின்னர் வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர்களில் ஒருவரான ப.சத்தியலிங்கம், தான் குற்றமற்றவன் என்ற அடிப்படையில் எந்தவொரு விசாரணைக்கும் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறான விசாரணையின் ஊடாக உண்மைத் தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் என்றும் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தில் பல ஆவணங்கள் காணாமல் போயிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளதாகவும் இதுவொரு பாராதூரமான விடயமாக தான் கருதுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அந்த ஆவணங்கள் எந்த அமைச்சில் இருந்து தொலைந்துள்ளது என்பதை முதலமைச்சர் குறிப்பிடாவிட்டாலும், குற்றப்புலனாய்வினர் மூலமாவது விசாரணை செய்து சரியான தீர்வை காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கான பொறுப்பும் கடமையும் முதலமைச்சரிடம் உள்ளதாகவும், ஆகவே விசாரணை செய்து குற்றவாளிகளை மக்கள் முன்நிறுத்துவதோடு, மிகவும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மருத்துவக் கொள்வனவுகளின் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும் அதற்கான ஆதாரங்களை விசாரணைக்குழுவிடம் கொடுப்பதன் ஊடாக நீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு முதலமைச்சரிடம் உள்ளதாகவும் வடமாகாண அமைச்சர் ப. சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.