Breaking News

தமிழ் மக்கள் பேரெழுச்சி; பெற்றுத்தந்த பெருவெற்றி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது நம் தமிழ் மக்கள் கொண்ட பேரெழுச்சி மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை தேர்தலுக்காக நீங்கள் அழைத்து வந்திருக்கலாம்.

ஆனால் அவரை முதலமைச்சராக்கியது நாங்கள். எனவே அவரை நீக்குகின்ற அதிகாரம் எதுவும் உங்களுக்கு கிடையாது. அவரை நீக்க நினைத்தால் நாங்கள் எப்படிப் பதிலளிப்போம் என்பதை பூரண ஹர்த்தால் மற்றும் ஆதரவுப் பேரணி மூலமாக மக்கள் தம் பேரெழுச்சியை வெளிப்படுத்தினர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது தமிழ் மக்கள் கொண்ட பாசம் தமிழ் அரசியல்வாதிகளை மட்டுமன்றி தென்னிலங்கை அரசியல்வாதிகளையும் கதிகலக்கியது.

தன்மீது தமிழ் மக்கள் இத்துணை நம்பிக்கையும் பற்றும் வைத்துள்ளனரா? என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் கூட நினைக்குமளவில் உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்கள் தங்கள் தலைவன் விக்னேஸ்வரன் என்பதை உறுதிபட உரக்கச் சொல்லியுள்ளனர்.

சுருங்கக்கூறின் தலைவர் பிரபாகரனுக்கு ஈடாக தங்கள் அகிம்சை வழித் தலைவனாக தமிழ் மக்கள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனைப் பார்க்கின்றனர் என்ற உண்மையை இனிமேலாவது தமிழ் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேநேரம் மக்கள் தலைவன் என்று புகழிட்டுக் கூறக்கூடிய வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் நடத்திய பேரெழுச்சி தமிழ் அரசியல் தலைமையை, தமிழ் அரசியல்வாதிகளை நிச்சயம் நெறிப்படுத்தும் என நம்பலாம்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போருக்குப் பின்பான தங்களின் வாழ்வு அச்சமற்றதாக - செழுமையுடையதாக அமைய வேண்டும் என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தங்கள் வாக்குகளை அளித்தனர்.எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம் உரிமை தொடர்பில்; போர்ப் பாதிப்புத் தொடர்பில் தமிழ் மக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்ளும் வகையில் செயற்படவில்லை. இது தமிழ்த் தலைமை மீது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது.

எனினும் மக்கள் பொறுமை காத்தனர். அந்தப் பொறுமையைச் சோதிப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பதவி மீது கைவைத்த போது தமிழ் மக்கள் வீறு கொண்டு எழுந்தனர்.

ஆக, தமிழ் அரசியல்வாதி எவர் தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டாலும் மக்கள் எழுச்சி கொள்வர் என்பது நிரூபணமாகியுள்ளதால் சகல தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் இனத்தின் - தமிழ் மக்களின் சுபீட்சத்துக்காக பாடுபட முன்வர வேண்டும்.