பதவி விலக மாட்டேன்: ஐங்கரநேசன்
ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் யாவும் திட்டமிட்ட சதி எனவும், விசாரணைக் குழுவில் சூழ்ச்சி உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ள வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், பொய்யான குற்றச்சாட்டுக்களுடன் பதவி விலக தயாரில்லையென குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் இன்றைய (புதன்கிழமை) விசேட அமர்வில் தன்னிலை விளக்கமளித்த ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பண பலத்தாலோ ஊடக பலத்தாலோ தாம் மாகாண சபைக்கு வரவில்லையென தெரிவித்த ஐங்கரநேசன், இதற்கு முன்னர் தாம் ஆசிரியராக பணியாற்றிய போது கிடைக்கப்பெற்ற நற்பெயரின் பிரகாரமே மாகாண சபைக்கு மக்கள் பலத்துடன் தெரிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இவ்வாறான நிலையில், தற்போது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமைச்சுப் பதவியை முதலமைச்சரே தனக்கு வழங்கியதாகவும் அதிலிருந்து விலகுமாறு கூறினால் நிச்சயம் பதவி விலகுவேன் என்றும் குறிப்பிட்ட ஐங்கரநேசன், பொய்யான குற்றச்சாட்டுக்களுடன் பதவி விலகினால் தலைமுறை தாண்டியும் இழிசொற்களுக்கு உள்ளாக நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தன் மீது பத்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும், அவற்றை நிரூபிக்க விசாரணைக் குழு தவறியுள்ளதெனவும் ஐங்கரநேசன் கூறியுள்ளார்.
இதேவேளை கொள்கை ரீதியாக மாகாண சபை எடுத்த சில முடிவுகளை பிழையென விசாரணைக் குழு குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஐங்கரநேசன், விசாரணைக் குழுவால் அவ்வாறு கூற முடியாதென மேலும் தெரிவித்தார்.