"சம்பந்தனுக்கு பாடம் கற்பிக்கும் சங்கரி
“இராஜதந்திர அணுகுமுறையை, தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்” என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில், அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தங்கள் கூட்டணியிலுள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைக் கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு வேண்டுவதற்கே மிக அக்கறையுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
ஒரு நாட்டை மட்டுமல்ல, அந்த நாட்டு மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் அவர்கள் அறிக்கைகள் விட முடியாது. சிந்தனையற்ற செயற்பாடுகள், அறிக்கைகள் போன்றவை கூடுதலாக தமிழரசுக் கட்சி உறுப்பினர்களிடமிருந்து வெளிவருவது, இந்தியாவுடனான நட்பையும் நல்லெண்ணத்தையும் கடுமையாகப் பாதிக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்களோ நானறியேன்.
ஏனைய உறுப்பினர்கள் செய்யும் தவறு இத்தகைய உறுப்பினர்களுடைய நடவடிக்கைகளைக் கண்டும் காணாமலும் அமைதியாகவும் இருப்பதே. சில சமயம் அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கலாம். நான் பகிரங்கமாக வெளிப்படுத்தாத, சில காரணங்களால், இலங்கையில் செயற்படும் இரு நாடுகளுக்கிடையிலுள்ள முரண்பட்ட செயல்கள், இரண்டு நாடுகளுக்கிடையில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில், விரிசல்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம். இதனால் மக்களே கடுமையாக பாதிக்கப்படுவர். எமது சிந்தனையற்ற உரைகளால் அப்படி நடப்பதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.