நிபந்தனைகளை தளர்த்தியுள்ள விக்னேஸ்வரன்!
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபையின் இரண்டு அமைச்சர்கள் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திக் கொள்வதாக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இந்த விடயத்தை விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண அமைச்சர்களான ப.டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் மீது புதிய விசாரணைகளை நடத்துவதற்காக, விசாரணைகளில் அவர்கள் தலையிட மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தவே அவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் இந்த காலப்பகுதியில் அவர்களுக்கான வரப்பிரசாதங்களை தடையின்றி அனுபவிக்க முடியும் என்பதால், இது அவர்களுக்கான தண்டனை இல்லை.\அதேநேரம் அவர்கள் இந்த விசாரணைகளில் தலையிட மாட்டார்கள் என்ற உறுதிமொழியை தம்மால் வழங்க முடியாது என்று, இரா.சம்பந்தன் முந்திய கடிதத்தில் தமக்கு தெரியப்படுத்தியமையை புரிந்துக் கொள்ள முடிகிறது.
அதேநேரம் குறித்த அமைச்சர்கள் விசாரணைகளில் குறுக்கிட கூடாது என்று அவர்களுக்கு அறிவுறை வழங்குவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனும், மதத்தலைவர்களும் இணங்கி இருக்கின்றனர்.இந்த இணக்கப்பாட்டை கருத்தில் கொண்டு, குறித்த இரண்டு அமைச்சர்களுக்கான கட்டாய விடுமுறை என்ற விடயத்தை தாம் வலியுறுத்தப் போவதில்லை என்று சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.