இரணைதீவுக்கு செல்கிறார் ருவன் ;போராட்டக்காரர்களையும் சந்திப்பார்
கிளிநொச்சி இரணைத்தீவு பகுதியில் மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாக ஆராய்வதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அப்பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இராஜாங்க அமைச்சருடன் விசேட குழு ஒன்றும் இன்றைய தினம் இரணைதீவு பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
இரணைதீவு மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற அனுமதிக்குமாறு கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்ப போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.
பாதுகாப்பு இராஜாங்கச் செயலாளர் ருவன் விஜேவர்தனவுடனும் அண்மையில் அவர் கலந்துரையாடியிருந்தார்.
இந்த நிலையிலேயே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தனது குழுவுடன் இன்றைய தினம் அப்பகுதிக்கு விஜயம் செய்யவிருப்பதோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குழுவினருடன் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரும் இரணைதீவுப் பகுதிக்கு செல்லவுள்ளனர்.
இரணைதீவு பகுதியை விடுவிப்பதற்கு கடற்படையினர் மறுப்பு தெரிவித்து வருகின்றதோடு இந்தப் பகுதி விடுவிக்கப்பட்டால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கடற்படையினரால் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.