Breaking News

சிறிலங்காவினால் புறக்கணிக்கப்படும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகள்



கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை உயர் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசேன் சிறிலங்காவால் நிறைவேற்றப்பட வேண்டிய சில முக்கிய பரிந்துரைகளை முன்வைத்திருந்தார். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் இப்பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை.

இப்பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா உடன்படவில்லை என பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்ட போது வெளியுறவு அமைச்சராக இருந்தவரும் தற்போதைய நிதி அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இவ்வாண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கையளிக்கப்பட்ட அறிக்கையில் சிறிலங்கா தொடர்பான பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

மனித உரிமைகள் பேரவையால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் ஒன்றை சிறிலங்கா ஏற்றுக்கொண்டதாகவும் ஆனால் குறித்த தீர்மானம் ராட் அல் ஹூசேனால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் உள்ளடக்கப்படவில்லை எனவும் சமரவீர தெரிவித்தார். போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அனைத்துலக விசாரணையை சிறிலங்கா ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இதற்குப் பதிலாக உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றே தேவை என சிறிலங்கா அழுத்தம் கொடுத்ததாகவும் அமைச்சர் சமரவீர தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு 48 நாடுகள் ஆதரவளித்ததாகவும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சமரவீர தெரிவித்தார். ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தால் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை ஆதரவளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இராணுவத்தில் அங்கம் வகிக்கும் சிலர் பாதுகாப்புப் படைகளின் நன்மதிப்பிற்கு களங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சமரவீர தெரிவித்தார். சிறிலங்க தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் பிரகாரம் சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மீறல்களுக்கு எதிராகவும் நீதியை நிலைநாட்டுவதற்கான கால வரையறைகள் மற்றும் அது தொடர்பான விபரங்கள் அடங்கிய முழுமையான மூலோபாயத் திட்டத்தை சிறிலங்கா ஏற்றுக்கொள்ள வேண்டும் என செய்ட் ராட் அல் ஹூசேன் கடந்த மார்ச் மாதக் கூட்டத்தொடரில் அழைப்பு விடுத்திருந்தார். தனது அலுவலகம் தொடர்ந்தும் சிறிலங்காவிற்கு தொழினுட்ப உதவியை வழங்கி வருவதாகவும் ஐ.நா அமைதியை நிலைநாட்டும் நிதியின் ஊடாகா சிறிலங்காவிற்கு உதவிகள் வழங்கப்படுவதாகவும் உயர் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

‘சிறிலங்காவானது வாக்குறுதி வழங்கியதைப் போன்று அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தை நாடாளுமன்றின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மேற்கொள்கிறது. பொதுமக்களிடம் இது தொடர்பில் ஆலோசிக்கப்படவில்லை. அடிப்படை உரிமைகள், நீதி, நிதி, சட்டம், ஒழுங்கு, பொதுச் சேவைகள், அரசாங்கத்துடனான உறவுநிலை போன்ற விடயங்கள் தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டமன்றின் ஆறு உப குழுக்களால் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதை நான் கண்டறிந்துள்ளேன்’ என ஐ.நா மனித உரிமை உயர் ஆணையாளர் தெரிவித்தார்.

சிறிலங்காவில் இடைக்கால நீதிப் பொறிமுறையை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டாலும் கூட நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான ஆலோசணைச் செயலணிக் குழுவால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையானது சிறிலங்காவில் வாழும் அனைத்து இன மற்றும் மதத்தவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளமை திருப்தி அளிப்பதாக செய்ட் ராட் அல் ஹூசேன் தெரிவித்தார்.

‘இந்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழு அளவில் பயன்படுத்தி இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துப் பயனுள்ள ஆலோசனைகளையும் சாத்தியமான வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன். சிறிலங்காவால் இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கும் கலப்பு நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்குமான கால வரையறை மற்றும் விபரங்கள் அடங்கிய முழுமையான மூலோபாயத்தை சிறிலங்கா ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது’ என செய்ட் ராட் அல் ஹூசேன் தெரிவித்தார்.

சிறிலங்காவானது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சாசனம் மற்றும் மாற்றுவலுவுடையோர் தொடர்பான உரிமைச் சாசனம் போன்ற விடயங்களில் முக்கிய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். ‘அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப சிறிலங்கா தனது உள்நாட்டுச் சட்டத்தில் மிக வேகமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். காணாமற் போனோர் தொடர்பாக பணியாற்றுவதற்கான அலுவலகம் ஒன்றை உருவாக்குதல் தொடர்பில் கடந்த ஆண்டு தீர்மானம் இயற்றப்பட்ட போதிலும் இன்னமும் செயற்படுத்தப்படவில்லை. இந்த அலுவலகமானது பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக முக்கிய பங்கையாற்றும்’ என செய்ட் ராட் அல் ஹூசேன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையை இழந்து வருவதால் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என செய்ட் ராட் அல் ஹூசேன் தெரிவித்தார். சிறிலங்கா இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள நிலங்கள் விடுவிக்கப்படுதலும் இதற்குள் உள்ளடங்குவதாகவும் ஆனால் இந்த நகர்வானது மிக மெதுவாகவே இடம்பெறுவதாகவும் மனித உரிமை உயர் ஆணையாளர் தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை திருத்தியமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாவும் அனைத்துலக மனித உரிமைச் சட்டத்தின் அடிப்படையிலேயே இது திருத்தியமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்தப் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் பூர்த்தி செய்யவில்லை எனவும் அல் ஹூசேன் குற்றம் சுமத்தியுள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சில வழக்குகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. சுயாதீன செயற்பாடு, பொதுமக்களின் மனித உரிமைகள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியே சட்டச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான விடயங்கள் இனிவருங் காலங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் காவற்துறை வீரர்கள் ஐ.நா அமைதி காக்கும் படையில் சேர்த்துக் கொள்ளப்படும் போது கருத்திற் கொள்ளப்படும்’ என ஐ.நா மனித உரிமை உயர் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

‘சிறிலங்காவில் உண்மை மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன, ஆனால் இந்த முயற்சிகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினருடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளது. தண்டனைகளிலிருந்து தப்பிப்பதை இனியும் பொறுக்க முடியாது என்கின்ற சமிக்ஞை அனுப்பப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணை செய்யப்பட்டு, அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்குவதில் சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் காலத்தை இழுத்தடித்து வருகிறது.

கடந்த கால மீறல்களுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படாவிட்டால் எதிர்காலத்தில் இவ்வாறான மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெறும். மீறல்கள் தொடர்பில் நீதியை எட்டுவதற்கு சிறப்பு ஆலோசகர்கள், வெளிநாட்டு நீதிபதிகள், பாதுகாப்புச் சட்டவாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதற்கு அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பும் முக்கியமானது என்பது கண்டறியப்பட்ட ஒரு உண்மையாகும்’ என செய்ட் ராட் அல் ஹூசேன் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் சுயாதீன ஆணைக்குழுக்கள் குறிப்பாக நல்லாட்சியைப் பலப்படுத்துவதற்கு மிகவும் பெறுமதிமிக்க பங்கை ஆற்றிவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என அல் ஹூசேன் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்புக்களுக்கு முற்றிலும் எதிர்மாறான வகையிலேயே ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் கருத்துக்கள் உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவாவிற்கான இயக்குனர் ஜோன் பிஷர் தெரிவித்தார். செய்ட்டின் அறிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்தால் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வாறான பொறுப்புக்களைக் கூறவேண்டும் எனவும் இது தொடர்பில் நீதி எட்டப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் ஐ.நா சுயாதீன வல்லுனர்கள் மற்றும் சிறிலங்காவின் மனித உரிமை அமைப்புக்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளதாக பிஷர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் ஏனைய நீதி சார் அதிகாரிகளை உள்ளடக்கிய நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் தயார்ப்படுத்தல் வேலைகளை ஆரம்பிக்கவில்லை என்பது தொடர்பில் செய்ட்டின் அறிக்கையான அதிருப்தி அடைந்துள்ளதை சுட்டிக்காட்டுவதாக பிஷர் குறிப்பிட்டுள்ளார். 2009ல் முடிவுற்ற சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தத்தில் பங்குபற்றிய இரு தரப்பினராலும் இழைக்கப்பட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவதில் விருப்பம் காண்பிக்கவில்லை என்பதை சிறிலங்கா அதிபரின் அறிக்கைகள் தெளிவாகச் சுட்டிநிற்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் போன்றன சுட்டிக்காட்டியுள்ளன.

வழிமூலம் – The Sunday leader
ஆங்கிலத்தில் – Easwaran Rutnam
மொழியாக்கம் – நித்தியபாரதி