Breaking News

ஞானசாரருக்கு ஆபத்து ஏற்பட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும்: பொதுபலசேனா எச்சரிக்கை!



பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு ஏதேனும் ஆபத்து நடந்தால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் அபாயமிருக்கின்றது என பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலாந்த வித்தானகே தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனா அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று(திங்கட்கிழமை) கொழும்பிலுள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைக்குள் செல்வதற்கோ, பொலிஸ்நிலையம் போவதற்கோ ஞானசார தேரர் உள்ளிட்ட தேரர்கள் அச்சப்படவில்லை. அநீதி இழைக்கப்பட்டிருப்பின் சிறைவாசம் செல்வதற்கு ஆயிரக்கணக்கான பிக்குகளும், இளைஞர்களும் தயார் நிலையிலேயே இருக்கின்றனர்.

ஆனால், அதற்குரிய வழிமுறைகள் உரிய வகையில் இடம்பெற வேண்டும் .நீதிமன்றத்தில் ஏன் ஆஜராகவில்லை என்பதற்குரிய காரணங்கள் நீதிமன்றத்தில் எமது சட்டத்தரணியால் தெளிவுபடுத்தப்பட்டது.

ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்று பொலிஸ்மா அதிபரிடம் கடந்த 24ஆம் திகதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் அவருக்குநோயும் ஏற்பட்டது. இது திடீரென ஏற்பட்ட நோய் அல்ல. தொடர்ச்சியாக அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதற்கு முன்னர் கொரியாவிலும், இலங்கையிலும் அவருக்கு சத்திரசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. மற்றுமொரு சத்திரசிகிச்சைக்கும் அவர் உட்படுத்தப்படவுள்ளார்.

இப்படி முடியாத கட்டத்திலும் தன் இனத்துக்காக அவர் குரல் கொடுத்து வருகின்றார்.தன்னைக் கொலை செய்து விடுவார்கள் என்ற அச்சத்தால் ஞானசார தேரர் ஓடி ஒழியவில்லை. அப்படி அச்ச நிலை அவரிடம் இருந்திருக்குமானால் இந்த அமைப்பை வழிநடத்தியிருக்கமாட்டார்.

ஐ.எஸ். அமைப்பின் ஊடாக ஞானசார தேரரைக் கொலை செய்யும் சூழ்ச்சிதீட்டப்பட்டுள்ளது. எனவே, ஞானசார தேரருக்கு ஏதேனும் நடந்தால் நாட்டில் இரத்தஆறு ஓடும்” என்றார்.