காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் யாழில் ஜனாதிபதி இன்று முக்கிய சந்திப்பு
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றைய தினம் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களைத் தேடும் உறவினர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரைத்தேடும் உறவினர்கள் கிளிநொச்சியில், ஏ - 9 வீதியை மறித்து பெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை மே மாதம் 30ஆம் திகதி முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இரு வாரங்களுக்குள் சந்தித்து கலந்துரையாடுவதாக தெரிவித்திருந்தார். அதற்கு அமைவாக இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியின் இந்தத் திடீர் விஜயம் தொடர்பில் தொலைபேசி ஊடாக, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு நேற்றுமுன்தினம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு, மாவட்டத்தின் சிறப்பு அபிவிருத்திக் குழுக்கூட்டம் நடைபெறும்.
இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வார். இந்தக் கூட்டத்துக்கான ஒழுங்குகள் நேற்றைய தினமே, மாவட்ட செயலக அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசியபோது, சிறப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இதற்கு அமைவாகவே இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளது எனத் தெரியவருகின்றது.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
வடக்கின் 5 மாவட்டங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் இந்தச்சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.