இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைக் கோருகிறார் கம்மன்பில
இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைத் தருமாறு சிறிலங்கா குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார்.
கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்று சிறிலங்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்தவாரம் தீர்ப்பளித்திருந்தது.
அதேவேளை, மேலும் பல இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக அமைச்சர் தயாசிறி ஜெயசேகர கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம், இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை, தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, உதய கம்மன்பில கேட்டுள்ளார்.