76 ஆண்டு கால சிற்றலை ஒலிபரப்பு பயணத்தை நிறுத்திக் கொண்டது பிபிசி தமிழோசை
பிபிசி தமிழோசையின் சிற்றலை வானொலி ஒலிபரப்பு நேற்றிரவுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. நேற்றிரவு தாயக நேரப்படி இரவு 9.15 மணி தொடக்கம் இடம்பெற்ற அரை மணிநேர சிறப்பு ஒலிபரப்புடன், சிற்றலை ஒலிபரப்பை பிபிசி தமிழோசை நிறுத்திக் கொண்டது.
1941ஆம் ஆண்டு மே 3ஆம் நாள் ஆரம்பித்த பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு, 76 ஆண்டுகளுக்குப் பின்னர், நவீன தொடர்பாடல் கருவிகளின் வருகைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல், முடிவுக்கு வந்திருக்கிறது.
பண்பலை ஒலிபரப்பு, இணையம், தொலைக்காட்சிகள் போன்றன, நவீன தொடர்பாடல் கருவிகளின் துணையுடன் மக்களை இலகுவாகச் சென்றடையத் தொடங்கியுள்ள நிலையிலேயே, பிபிசி தமிழோசையின் சிற்றலை வானொலி ஒலிபரப்பை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிபிசி தமிழோசை இலங்கையில் போர் நடந்த காலகட்டங்களில் நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் சென்றடைய முடியாத பகுதிகளில் நடப்பு நிலவரங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றியிருந்தது.
ஈழத் தமிழர்கள் மத்தியில் பிபிசி தமிழோசை பரந்துபட்ட வாசகர் வட்டத்தைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.