Breaking News

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் – மே 15 இல் வெளியாகிறது சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு



வரும் மே 15 ஆம் நாள் பிரசெல்சில் வெளியிடப்படும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சிறிலங்காவுக்கு மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் பறிக்கப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு தற்போதைய அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சலுகையை சிறிலங்கா பெற்றுக் கொள்வதற்கான பல தடைகள் நீங்கியுள்ள நிலையில், இம்மாத நடுப்பகுதியில் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், 3 ஆண்டுகளுக்கு மாத்திரமே இந்தச் சலுகை கிடைக்கும் என்றும் அதற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.