மே 18 மைத்திரி முல்லைத்தீவுக்கு வந்தால் அவரைத் துரத்தியடிப்போம்!
மகிந்த ராஜபக்ஷவின் பங்காளியாகவும், இறுதி யுத்தத்தில் பதில் ஆட்சியாளராகவும் இருந்த ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மே 18 ஆம் நாள் வறுமை ஒழிப்பு எனும் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக முல்லைத்தீவுக்கு பயணம் செய்யவுள்ளார்.
அமிர்தலிங்கத்துக்கு அஞ்சலி செலுத்த திருகோணமலை சென்ற முன்னாள் ஆட்சியாளர் பிரேமதாச மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி இந்தியாவின் உதவியுடன் எப்படிக் கடல்வழியால் தப்பிச் சென்றாரோ, அதே நிலமை முல்லைத்தீவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்படும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பசுபதிப்பிள்ளை ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ். ஊடக மையத்தில் நேற்று நடாத்திய கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பிலேயே குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில், மே 18 தமிழின அழிப்பின் நினைவுநாள். அந்நாளை மலினப்படுத்தும் நோக்கில் யார் செயற்பட்டாலும் அவர்களை விரட்டியடிப்போம்.
இந்நிலையில் மைத்திரிபால சிறிசேனவின் முல்லைத்தீவுக்கான பயணமானது உள்நோக்கம் கொண்டதெனத் தெரிவித்த அவர்கள், இந்நாளில் வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவது கபடத்தனமானது எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வழமைபோன்று மே 18 அன்று வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் எனவும், அதனை மலினப்படுத்தும் வகையில் மைத்திரி முல்லைத்தீவுக்குப் பயணித்தால் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முற்றுகைக்குள்ளாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.