Breaking News

தமிழ் மக்களின் பிரச்சினைகளை மோடியிடம் எடுத்துரைப்பேன்- சம்பந்தன்



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்த் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியப் பிரதமரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் வரும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன், “ இந்தியப் பிரதமருடன் நடக்கவுள்ள சந்திப்புத் தொடர்பாக இந்தியத் தூதரகம் என்னைச் சந்தித்து கலந்துரையாடியது,

இந்தியப் பிரதமரைச் சந்திக்கும் போது, சம கால அரசியல் நிலைமைகள் குறித்து பேசவுள்ளேன்.

குறிப்பாக, போரினால் பதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, காணாமலாக்கப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்களின் நிலைமை, காணி விடுப்பு, அது தொடர்பாக இடம்பெறும் போராட்டங்கள், வாழ்வாதார தேவைப்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்கள் குறித்து எடுத்துரைக்கவுள்ளேன்.

வடக்கு கிழக்கு மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளேன். இந்த நாட்டில் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய நிரந்தரமான நியாயமான அரசியல் தீர்வின் அவசியத்தை வலியுறுத்தவுள்ளேன்.

1983ஆம் ஆண்டிலிருந்து இந்தியா ஒருமித்த நாட்டிற்குள் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற நிலையில் அந்த நாட்டிற்கு பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும்.

தமிழ் மக்களுக்கான நியாயமான நிரந்தரமான தீர்வுக்காக அதிகாரங்கள் நியாயமாக பகிரப்படுவதற்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கோரவுள்ளேன்.

தற்போதைய சூழமைவில் இந்த முக்கியமான சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமானதாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.