Breaking News

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: ‘செயற்படுத்தினால் செவிப்பறை கிழியும்

“அமைச்சரவையினால், புதிதாக அங்கிகரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை செயற்படுத்த முயன்றால், மக்கள் போராட்டம் வெடிக்கும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.  

 இந்த விவகாரம் தொடர்பில் அவர், ​மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டமே கடந்த காலங்களில் அரசை, போர்க்குற்றம், இனப்படுகொலை குற்றங்களுக்குள் தள்ளிவிடக்காரணமாக அமைந்தது. அப்படியிருக்க புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சர்வதேச விழுமியங்களை ஒழுகியதாக அமைய வேண்டுமென, அனைவரும் விரும்பினர். அதற்காக சர்வதேச சட்ட நியதிகள் உள்ளடங்கிய செயற்பாட்டுப் பட்டறை ஒன்று கூட நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.   

இன்று, அனைத்தையும் பின்தள்ளி மீண்டும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடக்கூடிய புதிய ஜனநாயக விரோத கருத்துகளை உள்வாங்கி, இந்தக் கூட்டாச்சி அரசாங்கம் நிறைவேற்ற முற்படுவது கண்டனத்துக்குரியது.   

முன்னர் தனித்து நின்று செயல்பட்ட பேரினவாதக்கட்சிகள் இன்று ஒன்று சேர்ந்து தமிழரின் இருப்புகளை கேள்விக்குறியாக்கி வருகின்றன. புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நாட்டின் பிரஜைகளின் மனித உரிமைகளை மற்றும் தனி மனித உரிமைகளை மீறும் செயற்பாடாகவே நான் பார்க்கின்றேன்.   

வெறு​மனே வாய்ச்சொல்லாக படையினர் சுமத்தும் குற்றங்களுக்காக, தமிழர்கள் மீண்டும் வருடக்கணக்கில் விசாரணைகள் இன்றி அடைக்கப்படுவதற்கும் அவர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை முடக்கி அடக்கியாள இந்த அரசாங்கம் முற்படுகிறதா, என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.   

எனவே, சர்வதேச விழுமியங்களை மீறிய பயங்கரவாதத் தடுப்புச் சட்ட கருத்துகள் உடன் நீக்கப்பட்ட பின்னரே அந்த சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு எடுத்து வரப்பட வேண்டும். மீறி செயற்ட்டால் தமிழர் விடுதலையை முடக்கிய சர்வதேசத்தின் செவிப்பறையில் எமது மக்கள் போராட்டம் ஓங்கி அடிக்கும் காலம் வெகு தூரமில்லை” எனத் தெரிவித்தார்.