Breaking News

அரசியலமைப்பு திருத்தம் குறித்த இடைக்கால அறிக்கை – அடுத்த மாத இறுதியில் விவாதம்



அரசியலமைப்பு பேரவையில், அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பான விவாதம் ஜூன் மாத இறுதியில் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று வழிநடத்தல் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த இடைக்கால அறிக்கையின் பிரதி ஒன்று சிறிலங்கா அதிபரிடமும் வழங்கப்படும்.

இந்த இடைக்கால அறிக்கை தேர்தல்முறை மறுசீரமைப்பு, அதிகாரப்பகிர்வு, அரசின் தன்மை, உள்ளிட்ட முக்கியமான விடயங்களையும் உள்ளடக்கியிருக்கும்.

இந்த இடைக்கால அறிக்கையின் வரைவு அரசியலமைப்பு பேரவைச்செயலகத்தினால் தயாரிக்கப்பட்டு, வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களுக்கு கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது.

இடைக்கால அறிக்கை மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்கள் அனைவரினதும் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. மே 23 ஆம் நாளுக்கு முன்னர் எழுத்து மூலமான கருத்துக்களை தெரிவிக்குமாறு உறுப்பினர்களிடம் கோரப்பட்டுள்ளது.

வழிநடத்தல் குழு வரும் 23ஆம் நாளில் இருந்து 26ஆம் நாள் வரை கூடும் போது, உறுப்பினர்களின் கருத்துக்களை ஆராய்ந்து, அறிக்கையின் இறுதி வடிவத்தை தயார் செய்யும். விட்டுக் கொடுப்பு இணக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்தக் கூட்டங்களில் ஒருமித்த முடிவுகளை எடுக்க முனைகிறோம்.

ஒருமித்த கருத்து இல்லாவிடின், அறிக்கையில் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர். கருத்து வேறுபாடுகளும் அனுமதிக்கப்படும். என்றும் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.