வட மாகாண பட்டதாரிகளிற்கு இம்மாத இறுதியில் நேர்முகத் தேர்வு
வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் காணப்படும் கணித, விஞ்ஞானப் பாடங்களிற்காக விண்ணப்பித்த பட்டதாரிகளிற்கு 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளிற்கு 352 பட்டதாரிகள் அழைக்கப்பட்டபோதிலும் 321பட்டதாரிகள் மட்டுமே சமூகமளித்தனர் என வட மாகான கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்தீரன் தெரிவித்தார்.
வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில்,
வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் காணப்படும் கணித, விஞ்ஞானப் பாடங்களிற்காக விண்ணப்பித்த பட்டதாரிகளிற்கு கடந்த 25 மற்றும் 26 ம் திகதிகளில் நேர்முகத் தேர்வுகள் நடாத்தப்பட்டன. அதாவது வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடத்திற்கான ஆசிரியர்கள் வெற்றிடம் தொடர்பில் விபரம் திரட்டப்பட்டது. இதன் பிரகாரம் வடக்கில் குறித்த பாடத்திற்கான 418 வெற்றிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது
இதன் அடுப்படையில் குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியினையும் மத்திய அரசிடம் கோரியதற்கமைய குறித்த அனுமதியும் மத்திய அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் ஒரு மாத கால அவகாசத்துள் இதற்கான விண்ணப்பம் கோரியிருந்தோம். இருப்பினும் இந்தக் காலப்பகுதியில் 284 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்திருந்தன. இதனால் நேர்முகத்தேர்வினை நடாத்துவது தொடர்பில் ஆராய்ந்தபோது வெற்றிடம் அதிகமாக காணப்பட்டதனால் பட்டதாரிகளிற்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் விண்ணப்பிக்கும் காலத்தினை நீடித்தோம்.
இந்நிலையில் குறித்த பாடங்களிற்கான விண்ணப்பத்தினை ஏப்ரல் மாதம் வரையில் விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் பட்டதாரிகளிற்கு வழங்கப்பட்டது. இந்தக் காலத்தில் மேலும் 68 விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. இதன் பிரகாரம் மொத்தமாக கிடைக்கப்பெற்ற 352 பட்டத்தாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும் எமது மாகாணத்திற்குத் தேவையான 418 என்ற எண்ணிக்கையினை அடைய 66 விண்ணப்பங்கள் குறைவாகவே காணப்பட்டது என தெரிவித்தார்.
இடம்பெற்ற நேர்முகத்தேர்வில் ஒரு சிலரைத் தவிர ஏனைய அனைவரும் தகுதியை உடையவர்களாகவே காணப்படுவதால், சிலரின் பட்டங்களில் உள்ள தன்மையின் காரணமாக சுமார் 15பேர் அளவில் அந்த சந்தர்ப்பத்தினை இழக்க கூடும். எனையவர்களிற்கான நியமனத்தினை ஜூன் மாதம் முதல் வாரமே வழங்க முயற்சிக்கின்றோம். இதே நேரம் நேர்முகத் தேர்வினை தவறவிடப்பட்ட பட்டதாரிகளிற்கும் ஓர் மாற்று திகதியில் சந்தர்ப்பம் அளிப்பது தொடர்பிலும் ஆராயப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.