தமிழர்களுக்கு தொடரும் அநீதி
வெலிவேரிய- ரதுபஸ்வெலவில் 2013 ஆம் ஆண்டு
ஆகஸ்ட் மாதம் சுத்தமான குடிநீருக்காகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல்களை நடத்த இராணுவத்தினருக்கு உத்தரவிட்ட குற்றச்சாட்டில் பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்த்தன கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
போராட்டம் நடத்தப்பட்ட பகுதிக்கு இராணுவத்தினரைக் கொண்டு சென்ற இவரே, அங்கு கட்டளைகளைப் பிறப்பித்திருந்தார். அந்தச் சம்பவத்தில் 14 வயது மாணவன் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டதுடன் 33 பேர் காயமடைந்தனர்.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் இராணுவத்தினர் மீதும் அரசாங்கத்தின் மீதும் சிங்கள மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்படுவதற்கு இந்தச் சம்பவமும் ஒரு காரணம்.
ஆட்சியை இழந்த பின்னர் மஹிந்த ராஜபக் ஷ தனது தோல்விக்கான காரணிகள் பற்றிக் கூறிய போது, ரதுபஸ்வெல சம்பவத்தையும் நினைவுபடுத்தியிருந்தார்.
ஆனால், மஹிந்த ராஜபக் ஷ ஆட்சி யில் இருந்த வரைக்கும், இந்தச் சம்பவம் தொடர்பான நியாயமான விசாரணைகளை நடத்தவோ, இந்தச் சம்பவத்துக்குக் காரணமான படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ இல்லை. அதற்குப் பதிலாக பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவுக்கு துருக்கியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவி வழங்கி கௌரவம் அளிக்கப்பட்டிருந்தது.
பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய படை அதிகாரிகளில் ஒருவர். இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது டிவிசன் மன்னார் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து போரில் பங்கேற்றிருந்தது. பெருமளவு இடங்களைக் கைப்பற்றுவதிலும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதிலும் கணிசமான பங்கை ஆற்றியிருந்தது.
அதேவேளை இந்த டிவிசன் மீது பொதுமக்களின் இலக்குகள் மீது கண்மூடித்தனமாக பீரங்கித் தாக்குதல் நடத்தியமை, சரணடைந்த புலிகள் காணாமல் ஆக்கப்பட்டமை அல்லது படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
வெள்ளைக்கொடியுடன் சரணடைந்ததாக கூறப்பட்ட புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதும் இந்த டிவிசன் தான்.
நடேசன், புலித்தேவன், கேணல் ரமேஸ் உள்ளிட்டவர்கள் 58 ஆவது டிவிசன் படையினருடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டனர் என்பதை இராணுவத் தலைமையகம் அப்போது ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டனர் என்பதை இராணுவம் ஏற்கவில்லை. எவ்வாறாயினும் இத்தகைய சம்பவங்களுக்கு 58 ஆவது டிவிசனே பொறுப்பாக இருந்தது.
போரின் முடிவில் சரணடைந்த எழிலன் உள்ளிட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீது முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைகளில் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக இறுதிக்கட்டப் போரில் முக்கிய சாதனைகளை நிலைநாட்டியதாக கூறப்பட்ட அதேவேளை, அதிகளவு சர்ச்சைகளையும் சந்தித்து வரும் 58 ஆவது டிவி சன் அப்போது பிரிகேடியர் சவேந்திர சில்வாவின் தலைமையின் கீழ் செயற்பட்டிருந்தது.
மன்னார் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை முன்னேறிய இந்த டிவிசனில் மூன்று பிரிகேட்கள் உள்ளடக்கியிருந்தன. அவற்றில் ஒன்றின், அதாவது 58-1 பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் தான் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன. அப்போது அவர் லெப்.கேணலாக பதவியில் இருந்தார்.
இறுதிக்கட்டப் போர் தொடர்பாக 58 ஆவது டிவிசனின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், அந்த படைப்பிரிவின் எந்தவொரு அதிகாரி மீது இன்னமும் விசாரணைகள் நடத்தப்படவோ, நடவடிக்கைகள் எடுக்கப்படவோ இல்லை. ஆனால், பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன ரதுபஸ்வெல சூட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். இவரே இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ஆணை பிறப்பித்திருந்தார். ஆனாலும் அவர் கைது செய்யப்படுவதற்கு நான்கு ஆண்டுகள் இழுபறி ஏற்பட்டிருக்கிறது.
சிங்கள மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கே இந்தளவு காலம் சென்றிருக்கிறது.
இலங்கையில் இராணுவத்தினரும் அதிகாரிகளும் தண்டனையில் இருந்து தப்பித்தல் வழக்கமானதொரு நடைமுறையாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைகளும், கூட்டங்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றன.
படையினர் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்படாத வரையில் குற்றங்களைக் குறைக்க முடியாது என்றும், இத்தகைய நிலை குற்றச்செயல்களை ஊக்குவிப்பதாகவும் சர்வதேச அளவில் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனாலும், முன்னைய அரசாங்கமும் சரி, இப்போதைய அரசாங்கமும் சரி குற்றச்சாட்டுக்குள்ளான படையினர் மீது நடவடிக்கை எடுப்பதில் ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை.
குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் படையினர் பாதுகாக்கப்படும் நிலை தொடர்கிறது. போருடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் இருந்து படையினரைப் பாதுகாப்பேன் என்று நாட்டின் ஜனாதிபதியே உறுதி கூறுகின்ற அளவுக்கு நிலைமை இருக்கிறது.
குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாவிடினும், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு அரசாங்கமே பாதுகாப்பு அளிக்கின்ற ஒரு பொறிமுறை இன்னமும் இலங்கையில் காணப்படுகிறது.
குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்ட படையினர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது, அச்சம் கொண்டிருக்கிறது, குற்றம்சாட்டப்பட்ட படை அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் வழங்கி கௌரவிக்கிறது என்று அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் 52 உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட, ( ஜி.எஸ்.பி ) பிளஸ் சலுகை தொடர்பான பிரேரணை ஒன்றில் கூட சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இலங்கையில் பாரபட்சமற்ற நீதிப் பொறிமுறை ஒன்று இருப்பதாக அரசாங்கம் கூறிக் கொண்டாலும், தமிழர்களுக்கான நீதியும், பெரும்பான்மையினத்தவரான சிங்களவர்களுக்கான நீதியும் ஒன்றாக இருக்கிறது என்று கூற முடியாது.
ஏனென்றால், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஏராளமான மனித உரிமை மீறல்கள், குற்றங்கள் தொடர்பாக இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் சிங்களவர்களுக்கு எதிரான குற்றங்கள், மீறல்கள் குறித்து தாமதமாகவேனும் விசாரணைகள் நடத்தப்படும் நிலை உள்ளது.
ரதுபஸ்வெல படுகொலை தொடர்பான விசாரணையாகட்டும், லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை ஆகட்டும், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல், ஊடகவியலாளர்கள் கீத் நொயார், உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட சம்பவங்களாகட்டும் எல்லாமே இதற்கான உதாரணங்கள் தான்.
ரதுபஸ்வெல சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகப் போகின்ற நிலையிலேனும், துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கிறார். லசந்த படுகொலையுடன் தொடர்புடைய படை அதிகாரிகள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதுபோலத் தான் பிரகீத் எக்னெலிகொட,உபாலி தென்னக்கோன், கீத்நொயார் தாக்கப்பட்ட வழக்குகளிலும் இராணுவ அதிகாரிகள் பல ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த வழக்குகளில் இன்னமும் தீர்ப்புகள் அளிக்கப்படாத போதும், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன, சந்தேக நபர்களான படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், மேற்படி சம்பவங்கள் நடந்த காலகட்டங்களில் வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் தமிழர்களுக்கு எதிரான,ஏராளமான படுகொலைகள் நடந்திருக்கின்றன. கடத்தல்களும், காணாமல் ஆக்கப்படுதல்களும் இடம்பெற்றிருக்கின்றன. ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் இவை தொடர்பான எந்த வழக்குகளும் விசாரிக்கப்படுவதும் இல்லை, சம்பந்தப்பட்டவர்கள் என்று குற்றம்சாட்டப்படும் படை அதிகாரிகள் உள்ளிட்ட எவரும் கைது செய்யப்படவும் இல்லை. இதுபோலத் தான், ஏனைய மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச்சாட்டுகளின் நிலையும் உள்ளது.
இறுதிப் போரில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள எழிலன் உள்ளிட்டவர்கள் தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடக்கின்ற விசாரணைகளை அரச தரப்பு இழுத்தடித்து வருகிறது. கடைசியாக நடந்த விசாரணையில், சம்பவம் நடந்த போது 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே என்றும், அவரிடமே, அதுபற்றி அறிய வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்த்தன கூறியிருந்தார்.
அதையடுத்து, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றத்துக்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு சட்டத்தரணி கோரிக்கை முன்வைத்த போது, அதற்கு அரசதரப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டது. மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பாணை அனுப்பாமல் தடுப்பதற்கு அரசதரப்பு கடும் பிரயத்தனங்களை எடுத்து வருகிறது.
ஒரு பக்கத்தில் சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களில் சிங்கள ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் படை அதிகாரிகளாக இருந்தாலும், நீண்ட இழுபறிக்குப் பின்னராவது சட்டத்தின் முன் நிறுத்தும் சூழல் இருக்கிறது.
ஆனால் தமிழர்களுக்கான நீதி அவ்வாறானது அல்ல. ஒன்றில் நீதியின் முன் நிறுத்தப்படாத நிலை காணப்படுகிறது. அல்லது குற்றவாளிகளை தப்பிக்க விடும் சூழல் காணப்படுகிறது.
காணாமல்போனோர் தொடர்பாக பரணகம ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு விசாரணைக் குழுக்களால் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, கடத்தல்களில் ஈடுபட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள், படையினரின் விபரங்கள், பாதிக்கப்பட்ட தரப்பினரால் தெளிவாக முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனாலும் அவர்கள் மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை, நடவடிக்கை எடுக்கப்படவுமில்லை. இதுபோன்ற பாரபட்சமான நீதி முறை தான் இன்னமும் இலங்கையில் நீடித்துக் கொண்டிருக்கிறது,
வடக்கிலும், கிழக்கிலும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நீதிக்கான எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றன. அவர்களின் நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டிருக்கின்றன.
அதேவேளை, ஒரு பக்கத்தில் இராணுவத்தினரைப் பாதுகாப்போம் என்று சூளுரைத்திருக்கின்ற அரசாங்கம் இன்னொரு பக்கத்தில் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அவர்களின் நலன்களையும் உதாசீனப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.
போரில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலையில் இருந்து நீதியை வழங்காமல், வெற்றியைப் பெற்ற தரப்பில் இருந்து நீதியை வழங்குகின்ற நடைமுறை நீடிக்கின்ற வரையில், இலங்கையில் பக்கசார்பற்ற, பாரபட்சமற்ற, நடுநிலையான நீதி முறைமை இருக்கிறது என்று எவராலும் கூற முடியாது.