Breaking News

திலக் மாரப்பனவினால் அரசுக்கு மீண்டும் நெருக்கடி



சிறிலங்கா அமைச்சரவையில் மீண்டும் திலக் மாரப்பனவை சேர்த்துக் கொண்டமை குறித்து சிவில் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஐதேக ஆட்சியில் 2001 தொடக்கம் 2003 வரை பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்த திலக் மாரப்பன, 2003 ஆம் ஆண்டு அதிபராக இருந்த சந்திரிகா குமாரதுங்கவினால் பதவி நீக்கப்பட்டடிருந்தார்.

2015ஆம் ஆண்டு அவர் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் சட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பதவியேற்றார்.

எனினும், சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் பாதுகாப்பு நிறுவனத்துடன் கொண்டிருந்த தொடர்புகளாலும், இந்த நிறுவனத்துக்கு சார்பாக நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களால் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்தும் அவர் 2015 நொவம்பரில் பதவி விலக நேரிட்டது.

இந்த நிலையில் நேற்று நடந்த அமைச்சரவை மறுசீரமைப்பின் போது. திலக் மாரப்பனவுக்கு, முன்னர் மகிந்த சமரசிங்கவிடம் இருந்த அபிவிருத்திப் பணிகள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

திலக் மாரப்பன அமைச்சரவையில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டதன் மூலம், சிறிலங்கா அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது.

2015ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்த போது, அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது.

எனினும், ஐதேகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஆட்சியைப் பங்கு போடுவதில் ஏற்பட்டுள்ள இழுபறிகளால், தற்போதை அரசாங்கம் 44 அமைச்சர்கள், மற்றும் 43 பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களைக் கொண்டுள்ளது.

அதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சிக் கொள்கைக்கு விரோதமாகச் செயற்பட்ட திலக் மாரப்பன மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது குறித்து சிவில் சமூகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

அவன்ட் கார்ட் நிறுவனம் மீது நடவடிக்கைகளை எடுப்பதற்கு தடைகளை ஏற்படுத்தி வந்த திலக் மாரப்பன மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டதை, நீதி மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான பரப்புரை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பான கீர்த்தி தென்னக்கோன் கடுமையாக விமர்சித்துள்ளார்.