போர்க்குற்ற நீதிமன்றில் படையினரை நிறுத்த அனுமதியேன் – மகிந்த சூளுரை
சிறிலங்கா படையினரை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
கொழும்பு- காலிமுகத்திடலில் நேற்று நடந்த கூட்டு எதிரணியின் மே நாள் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘இந்த அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்பனை செய்கின்றது. தெற்கில் மட்டுமல்ல. வடக்கு, கிழக்கில் உள்ள வளங்களையும் இந்த அரசு விற்பனை செய்கிறது.
அம்பாந்தோட்டை துறைமுகத்துடன் சேர்த்து 15000 ஏக்கர் நிலத்தை சீனாவுக்கு வழங்கவும், மாதுரு ஓயா பகுதியில் இடம் வழங்கவும் அனைத்து ஏற்பாடுகளையும் இந்த அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
நாட்டு மக்கள் ஒரு முறை ஏமாந்து விட்டனர். மீண்டும் ஏமாறமாட்டார்கள். நாட்டின் வளங்களை பாதுகாக்க ஒன்றிணைந்து தேசிய கொள்கை அடிப்படையில் செயற்படுவர்.
இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை நாம் காலி முகத்திடலில் இருந்து ஆரம்பிக்கின்றோம்.
எமது பயணத்துக்கு அச்சுறுத்தல்கள் பல ஏற்படுத்தப்பட்டன. எம்மை சிறையடைத்தார்கள். விமல் வீரவன்ச, ஜோன்ஸ்டன், கம்பன்பில, மஹிந்தானந்த, நாமல், எனது சகோதரர்கள், அரச அதிகாரிகள் என பலர் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டனர். அத்தனை அச்சுறுத்தல்களையும் தாண்டி இங்கு ஒன்று சேர்ந்துள்ளோம்.
இந்த அரசாங்கம் முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே நாள் கூட்டத்தை நடத்துமாறு எனக்கு சவால் விட்டது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன்.
இன்று அந்த சவாலை வெற்றி கொண்டு காண்பித்துள்ளேன். இப்போது நான் இந்த அரசாங்கத்துக்கு ஒரு சவாலை விடுக்கின்றேன்.
எனது ஆட்சியை கைப்பற்ற இந்த அரசாங்கம் பல மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளது. சிலர் மலசல கூடங்களுக்குள் வைத்தே பணத்தை வழங்கியுள்ளனர்.
எனது காலத்தில் இராணுவம் பயங்கரவாதத்தை இல்லாது செய்து சமாதானத்தை ஏற்படுத்தினர். எனினும் இன்று இராணுவத்தினரை மக்களின் நியாயமான கோரிக்கைகளை முடக்க பயன்படுத்தப் பார்க்கின்றனர்.
எமது இராணுவத்தினரை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்தும் விதமாகவே இந்த அரசாங்கம் செயற்படுகிறது. அதற்கு இடமளிக்க முடியாது. இந் நாட்டை பாதுகாத்த இராணுவத்தினரை அனைத்துலக போர்க் குற்ற நீதிமன்றில் நிறுத்த ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.