இன்று சர்வதேச தொழிலாளர் தினம்
எனினும் அந்த கொண்டாட்டம் இன்று உழைக்கும் வர்க்கத்தினரின் கைகளில் இருந்து அரசியல் தரப்பின் கைகளுக்கு மாறிக்கொண்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இது உழைக்கும் வர்க்கத்தினரின் சொத்தான மே தினத்தின் தனித்துவத்தை இழக்கச் செய்துவிட்டதாக பலரும் கருதுகின்றனர்.சில தொழிற் பிரிவினர் மாத்திரம் மே தினத்தின் தனித்துவத்தை தக்கவைக்கும் வகையில் உழைக்கும் வர்க்கத்தினரை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் மே தினத்தை இன்று கொண்டாடுகிறனர்.
இருப்பினும் மே தினம் கட்சி அரசியலோடு இணைந்து செல்வது நவீன உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.18ஆம் நூற்றாண்டு காலப்பகுதயில், 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டமைக்கு எதிராக ஏற்பட்ட புரட்சியே மேதின உருவாக்கத்தின் ஆரம்பமாக இருந்தது.
குறிப்பாக இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் இதில் முக்கிய பங்கினை வகித்தது.சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போரட்டங்களை நடத்தியது.அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.அதேநேரம், 1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர்.
இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்.1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.1856இல் ஆவுஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர்.இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.
ரஷ்யாவை ஆட்சி செய்த சார் மன்னரால் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள்..இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன.
1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.
தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டிருந்தது.அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர்.
அதேபோல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து 'அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு'என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.
இந்த இயக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது.1886ஆம் ஆண்டு மே முதலாம் திகதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது.இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது.
இந்தவேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்காவின் பல நிறுவனங்கள் மூடப்பட்டன.
வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது.மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
மே 3, 1886ஆம் ஆண்டு சிக்காக்கோவில் நடபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது.இதன் போது கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது.1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் 'சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்றம் கூடியது.இதில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
இதுவே பின்னர் மே ஒன்று தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டது.இந்த போராட்டங்கள் அனைத்தையும் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தியுள்ளனர்.இலங்கையிலும் இன்றையதினம் தொழிலாளர்கள் மேதின நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.இந்த நிலையில் இலங்கையில் இன்று மே தின கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
அந்தவகையில், கொழும்பிலும், வெளிமாவட்டங்களிலும் அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் மேதின கூட்டங்களை நடத்துகின்றன.கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மாத்திரம் இன்றையதினம் 15 மேதினக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் பொரல்லை கெம்பல் மைதானத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேதின கூட்டம் கண்டி கெட்டம்பேயில் இடம்பெறுகின்றது.பொது ஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின கூட்டம், அக்கரைப்பற்றுஆளையடிவேம்பிலும், ஜேவிபியின் பிரதான மேதின கூட்டம் பீ.ஆர்.சி மைதானத்தில் நடைப்பெறவுள்ளது.
இதனிடையே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான மே தின கூட்டம் கினிகத்தேன நகரில் இடம்பெறவுள்ளது.இதேவேளை, தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான மே தின கூட்டம் இடம்பெறவுள்ளது.இந்தநிலையில், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் மே தின நிகழ்வு தமது கோரிக்கைகளை முன்வைத்து தோட்டவாரியாக இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்புநகரில் நடைபெறுகின்ற மே தின கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்கள், தங்களின் உணவு மற்றும் குடிபானங்களை பெற்றுக் கொள்ளும் வியாபார நிலையங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.அத்துடன் நகரை அசுத்தப்படுத்த வேண்டாம் என்றும் கோரப்பட்டுள்ளது..
இதற்கிடையில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இடம்பெறவுள்ள மே தின கூட்டங்களில் பங்குபற்றுகின்ற மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதன்பொருட்டு காவற்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது