Breaking News

மகிந்தவுக்கு மீண்டும் அதிர்ச்சியைக் கொடுத்த அரசாங்கம்



சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்த மேலும் 50 காவல்துறையினர் நேற்று திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டு, மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்த 42 காவல்துறையினர் அண்மையில் நீக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் அவருக்கு 187 காவல்துறையினரின் பாதுகாப்பு போதுமானது என்பதாலேயே, 42 காவல்துறையினர் பாதுகாப்பு அணியில் இருந்து விலக்கப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு திடீரென மேலும் 50 காவல்துறையினரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இதையடுத்து, பதற்றமடைந்த மகிந்த ராஜபக்ச தரப்பு, இது மகிந்தவின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டியது.

இந்த நிலையில் திடீரென சில மணிநேரங்களுக்குப் பின்னர்- மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்து 50 காவல்துறையினரை விலக்கி்க் கொள்ளும் உத்தரவை, காவல்துறை தலைமையகம் மீளப் பெற்றுக்கொண்டது.

திடீரென இந்த முடிவுகள் எடுக்கப்பட்டமைக்கான காரணம் வெளியாகவில்லை.