தமிழ் அரசியல் கட்சிகள் இனவாதம் பேசுகின்றன! – கருணா குற்றச்சாட்டு
தமிழ் அரசியல் கட்சிகள் இனவாதம் பேசி நாட்டின் அமைதியை குழப்ப முயற்சிப்பதாகவும் அதனை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டு எதிரணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் இனவாத கட்சிகளை விரட்டியடிக்கவே தாம் புதிய கட்சியை ஆரம்பித்ததாகவும் அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் இதன்போது கூறினார்.
அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே அதிக அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அது போன்ற அபிவிருத்தித்திட்டங்களை உலகில் எந்த தலைவரும் முன்னெடுக்கவில்லை எனவும் கருணா மேலும் தெரிவித்தார்.
மேலும், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து மஹிந்த ராஜபக்ஷவே நாட்டில் அமைதியை ஏற்படுத்தினார் என்றும், அவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை, கடந்த ஆட்சிக் காலத்தில் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகவே மக்கள் பாதிப்புகளை எதிர்கொண்டதாகவும் எனினும், தற்போதைய ஆட்சியிலேயே குப்பை மேடு சரிந்து விழுந்து மக்கள் உயிரிழந்ததாகவும் கருணா குற்றஞ்சாட்டினார்.