தொடர் போராட்டம் வெற்றியை தரும் முதல்வர் விக்னேஸ்வரன் கருத்து
தரமுடியாதென்ற மனோபாவத்தில் இருப்பவர்களை தட்டிக் கேட்டால்தான் பெற முடியும் என தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எமது போராட்டங்களை அமைதியாக நடத்திச் சென்றால்த்தான் தரமுடியாதென்றவர்களின் மனதிலும் தரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவாளர்களின் மே தினப் பேரணியும் பொதுக் கூட்டமும் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவுக் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
இன்று தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பல வசதிகள் சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. நாளொன்றுக்கு 16 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும், சிறுவர்களும் வேலை செய்ய வேண்டும், பெண்களும் வேலை செய்ய வேண்டும் என்றே அப்போதைய தொழில் வழங்குநர்களின் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்காகவும், சிறுவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவும் பெண்களுக்கான சில பிரத்தியேக நன்மைகளைப் பெறுவதற்காகவும் அக்காலத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
தொடர்ச்சியான போhராட்டங்களே இன்று நாளொன்றுக்கு 8 மணித்தியால வேலை, வார இறுதி விடுமுறைகள், 21 நாட்கள் பிரத்தியேக விடுமுறை, 24 நாட்கள் சுகவீன விடுமுறை, முழுச் சம்பளம், அரைச் சம்பளத்துடனான கற்றல் மற்றும் மகப்பேற்று விடுமுறைகள் என பலதரப்பட்ட சலுகைகளை இன்றைய தொழிலாளர்களுக்கு கிடைக்க வைத்துள்ளது. இவை அன்றைய தொழிலாளர்களின் தொடர் எழுச்சிப் போராட்டங்கள் மூலம் பெறப்பட்ட உரிமைகளாவன. அவர்கள் அன்று போராடியதால்த்தான் இன்று நாம் உரிமைகள் பெற்று வாழ்கின்றோம்.
இன்று நாம் போராடினால்த்தான் நாளை எம் வாரிசுக்கள் அதன் நன்மையைப் பெறுவார்கள். அவர்களின் போராட்டங்கள் எமக்குப் பல படிப்பினைகளை ஊட்டவல்லன. அதாவது தரமுடியாதென்ற மனோபாவத்தில் இருப்பவர்களை தட்டிக் கேட்டால்த்தான் பெற முடியும். தட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம்.
அல்லல்களையும் அவலங்களையும் அடிதடியையும் ஏற்று எமது போராட்டங்களை அமைதியாக நடத்திச் சென்றால்த் தான் தரமுடியாதென்றவர்களின் மனதிலும் தரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அத்துடன் தனித்துப் போராடாது ஒற்றுமையு டன் சேர்ந்து தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம் என்பனவே அந்தப் பாடங்கள்.
ஆரம்ப காலங்களில் தொழிற்சங்க தலைவர்களாக விளங்கியவர்கள் அரசியல் கலப்புக்கள் அற்ற, தொழிலாளர்களின் பிரச்சினைகளை உலக அளவில் முன்னெடுக்கக்கூடிய அளவிற்கு ஆளுமையைக் கொண்டிருந்தனர். பின்னர் அரசியல் புகுந்துவிட்டது.
இன்று ஒவ்வொரு தொழிற்சங்கமும் ஆரம்பிக்கும் போதே ஒரு அரசியல் பின்னணியைக் கொண்டதாக அமைந்திருப்பதால் தொழிலாளர்களின் நலன்கள் இலகுவில் விலை போகின்றன.
கூட்டுறவுத்தந்தை என அழைக்கப்படும் வீரசிங்கம் அவர்களின் கடின உழைப்பில் உருவாக்கப்பட்ட வடமாகாண கூட்டுறவுத்துறை 1970களில் அரசியல் புகுந்ததால் இன்று நலிவடைந்த நிலையில் காணப்படு வது மனதிற்கு வேதனையளிக்கின்றது.
அரசியலானது எமது முழுச்சமுதாயத்தையும் குட்டிச்சுவராக்கிவிட்டது. இடமாற்றங்களும், போரும், அரசியல் உள்ளீடுகளும் கூட்டுறவைச் சீரழித்து விட்டன. இன்று பலர் கூட்டுறவை வைத்துத் தமது அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யப் பார்க்கின்றார்கள்.
கூட்டுறவாளர்களால் நடத்தப்படும் இந்த மேதினக் கொண்டாட்டம் எமது தமிழ் இனத்திற்கு கூட்டான ஒருமித்த செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமையட்டும்.
மக்களின் தேவைகளுக்கான அரசியல் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். சுயநலங்கருதாது ஒற்றுமைப்பட்ட ஒன்றிணைந்த அரசியல் நடவடிக்கைகளே எமக்கு வளத்தையும் வாழ்வையும் தரவல்லன என முதலமைச்சர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.